ஹர்த்தால் செய்வதால் நாட்டில் குற்றச்செயல்கள் குறைவடைந்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சித் தலைமையகத்தில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கான வழக்கு இன்றுவரை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதற்கான எந்தவொரு தீர்வும் எட்டப்படாத நிலையில் தற்போது மீண்டும் அவ்வாறானதொரு கோர சம்பவம் நடைபெற்றுள்ளது, அதாவது மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலை. இதற்காக நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுகின்றது. இது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று எமது ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அங்கஜன் ஹர்த்தால் அனுஷ்டிப்பு என்பது ஒரு நல்ல விடயம். தவறுகளைத் தட்டிக் கேட்டு நடாத்தப்படும் ஹர்த்தால் அனுஷ்டிப்பால் வன்முறை சம்பவங்கள் குறைகின்றது. ஆனால் நாட்டில் நடைபெறும் இவ்வாறான சம்பவங்கள் கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட வேண்டியவர்களாவர்.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை கொலை சம்பந்தமாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது. வெகு விரைவில் இதற்கான தீர்வுகள் கிடைக்கும் என நான் உறுதியளிக்கின்றேன்.

மேலும் ஹரிஸ்ணவியின் படுகொலை சம்பந்தமாக பலதரப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாணவி ஹரிஸ்ணவியின் கொலையைப்பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியுள்ளோம். இதுபற்றி ஜனாதிபதி தரப்பிலிருந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் தெரிவித்துள்ளார்.