முல்லைத்தீவில் ஊடகவியலாளரை கைது செய்த இராணுவம்!

நேற்றைய தினம் (15) மாலை முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தருகில் இராணுவத்தினால் ஊடகவியலாளர் கைதுசெய்யப்பட்டதாக தெரியவருகிறது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் அமைந்திருக்கின்ற விடுதைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருக்கும் இராணுவத்தினரால் துயிலும் இல்ல காணியில் புதிதாக அமைக்கப்படுகின்ற கட்டடத்தையும் அது தொடர்பான வேலைப்பாடுகளையும் முள்ளியவளையை சேர்ந்த யதுர்சன் சொர்ணலிங்கம் என்ற ஊடகவியலாளர் ஒளிப்படமெடுத்த போது அங்கிருந்த இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக அவர்களது வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் உபயோகிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட ஆயுத பாவனை தொடர்பிலும் , மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலும் சாட்சியங்கள் திரட்டி வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அத்துடன் இதற்கு முன்னரும் குறித்த ஊடகவியலாளர் பல தடவை இலங்கை இராணுவ புலனாய்வாளர்களினால் அச்சுறுத்தலுக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.