625.256.560.350.160.300.053.800.461.160.90மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அத்துமீறி குடியேறியவர்களை வெளியேற்றக் கோரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அனுப்பி வைத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்பற்று மற்றும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் பெரியமாதவணை, மயிலத்தமடு ஆகிய பகுதிகளில் அண்மைக் காலமாக சிங்களவர்களின் அத்துமீறிய குடியேற்றம் நடைபெற்று பௌத்த விகாரை ஸ்தாபிக்கப்பட்டது சார்பாக தமிழ் அரசியல்வாதிகள் நேரடியாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், தங்களையும் அழைத்துச் சென்று காண்பித்துள்ளனர் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

அத்துடன் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம், பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம் என்பவற்றில் பல தடவை பேசப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இக்காணி வனபரிபாலன திணைக்களத்திற்குரியது என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் தற்போது பெரும்பகுதி மகாவலி அதிகார சபைக்கும் சிறிய பகுதி வனபரிபாலன சபைக்கும் உரியதென அறிவிக்கப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

குறிப்பிட்ட அத்துமீறிய குடியேற்ற வாசிகளை உரிய இடத்தில் இருந்து வெளியேற்றுவதை தெளிவுபடுத்தும் கூட்டம் அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் தாங்களும் மேலதிக அரசாங்க அதிபரும் சமூகமளிக்கவில்லை என அறிகின்றேன். மாகாண காணிப் பகுதியினரும், மகாவலி அதிகார சபை உட்பட்ட பகுதியினரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் அத்துமீறி குடியேறியவர்களை மிகவிரைவாக வெளியேற்றுவதாக உறுதி வழங்கப்பட்டதுடன், அதற்கான மீளாய்வுக் கூட்டம் பத்து நாட்களில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டதாக அறிகின்றேன். ஆனால் இதுவரை நடாத்தப்படவில்லை என்பதும் தெரிய வருகின்றது.

எனவே அத்துமீறிய குடியேற்ற வாசிகளை வெளியேற்றும் மீளாய்வுக் கூட்டத்தினை மிக விரைவாக நடாத்தி இவ் அத்துமீறி குடியேறிய பெரும்பான்மையின மக்களை முற்றுமுழுதாக வெளியேற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்தும் முகமாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினருக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இதேவேளை மாண்புமிகு ஜனாதிபதி அத்துமீறிய குடியேற்றங்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக மடல் அனுப்பியுள்ளதாக அறிகின்றேன். எனவே இவ்விடயமாக தாங்கள் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகின்றேன் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.