யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் விவகாரம் தற்போது பெற்றோர்களின் கைகளுக்கு சென்றுள்ளது.

இழுபறி நிலையிலுள்ள குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்காக மகளிர் கல்லூரி மாணவிகளின் பெற்றோர்களை ஒன்றிணைத்து புதிய நிர்வாக குழுவொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது கடுமையாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும், அதற்கு பின்னரான சூழ்நிலை தொடர்பிலும் ஆராய்வதற்கான முக்கிய கலந்துரையாடல் இன்று (11) இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் மாலை 04 மணியளவில் சுன்னாகம் காங்கேசன்துறை வீதியில் பெற்றோல் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக அமைந்துள்ள திசா ரெஸ்ற் விடுதியில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தின் போது கலந்து கொண்ட கல்லூரி மாணவிகளின் பெற்றோர்கள் இந்த விடயம் தொடர்பில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக ஆராய்ந்தனர்.

 

அதன் பின்னர் குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து தீர்க்கும் வகையில் நிர்வாகக் குழுவொன்று ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டது.

இந்த குழுவின் தலைவராக சி. எ. தயாபரனும், செயலாளராக க. வேல்தஞ்சனும், பொருளாளராக ப. நந்தீஸ்வரனும், உப தலைவராக ச. கெளரிதரனும், உபசெயலாளராக தனஞ்சயனும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், 12 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் தமது அதிபரின் பதவி காலத்தை நீடிக்க வலியுறுத்தி ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் பின்னர் உண்ணாவிரத போராட்டமாக மாறியது.

 

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மாணவிகள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் குழப்பும் வகையில் கல்லூரிக்கு வருகை தந்த தென்னிந்திய திருச் சபையின்நெருக்கமானவர்களாலும் , கல்லூரியின் ஆசிரியர்களாலும் மாணவர்களின் போராட்டம் திட்டமிட்டு குழப்பப்பட்டதுடன், இதன் போது மாணவிகள் மீதும் கடுமையான தாக்குதல்களும், அநாகரிகமான வார்தை பிரயோகங்களும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் மாணவிகள் மீது இடம்பெற்ற தாக்குதல் பின்னணியில் அரசியல் தலையீடு காணப்பட்ட காரணத்தால் மாணவிகள் ,மீது உரிய சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என பல்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

 

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மதியம் கல்லூரிக்கு நேரடி விஜயம் மேற்கொண்ட மல்லாகம் மாவட்ட நீதவான் கல்லூரியின் முன்னாள் அதிபர், புதிதாகப் பதவியேற்றுள்ள அதிபர், கல்லூரி ஆசிரியர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடினார்.

அதன் பின்னர் குறித்த பிரச்சினை சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக மல்லாகம் மாவட்ட நீதவான் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.

எனினும், மறுநாளான வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு மிகவும் குறைந்தளவான மாணவிகளே சென்றிருந்தனர்.

பெரும்பாலான மாணவிகளின் பெற்றோர்கள் அச்சத்தின் காரணமாகவே தமது பிள்ளைகளை கற்றல் செயற்பாடுகளுக்காகக் கல்லூரிக்கு அனுப்பவில்லை.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் பழிவாங்கப்படுவார்கள் என்ற காரணத்துக்காக தமது பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்ப மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.

குறித்த விடயம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதும் எதுவிதமான முன்னேற்றகரமும் ஏற்படவில்லை.

இவ்வாறான சூழ்நிலையிலேயே மகளிர் கல்லூரி மாணவிகளின் விவகாரத்தைக் கல்லூரியின் பெற்றோர்கள் தமது கையில் எடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)