யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்புக்கு நீதிவேண்டி வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு மக்கள் முழு ஆதரவினையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ். பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்ஷன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோர் கடந்த 20ஆம் திகதி பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் அகால மரணமடைந்துள்ளனர்.

இறந்த அந்த இளைஞர்களுக்கு அனுதாபம் தெரிவித்தும் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்களுக்கு எதிராக நீதியான விசாரணையை வலியுறுத்தியும் எதிர்வரும் 25 ஆம் திகதி வடமாகாணம் முழுவதும் ஒருநாள் அடையாள முழு அடைப்பு (ஹர்த்தால்) தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாமும் அதற்கு முழு ஆதரவினைத் தெரிவிப்பது எமது தார்மீகக் கடமையாகும். ஆகவே இந்த நீதிக்கான கோரிக்கைக்கு எமது ஆதரவினைத் தெரிவித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25.10.2016) அன்று அனைத்து நடவடிக்கைகளையும் தவிர்த்து இறந்த ஆத்மாக்களுக்கு அமைதி வேண்டியும் நீதி வேண்டியும் பிரார்த்திப்போம்.

இந்த போராட்டத்தில் அரசாங்கத்தின் அனைத்து திணைங்களைச் சேர்ந்த ஊழியர்களும், கல்விச் சமூகத்தினரும், தனியார் மற்றும் அரச போக்குவரத்து ஊழியர்களும், முச்சக்கர வாகன ஊழியர் மற்றும் உரிமையாளர் சங்கங்களும், அனைத்து பொது அமைப்புக்களும், சிவில் அமைப்புக்களும், தொழிற்சங்கங்களும் பொதுமக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.