அமெரிக்காவில் உணர்வெழுச்சியுடன் கூடுகின்றது நாடுகடந்த தமிழீழ அரசவை

அகவை எட்டினைக் காணும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தனது அரசவையின் நேரடி அமர்வினை உணர்வெழுச்சியுடன் அமெரிக்காவில் கூடவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

புலம்பெயர் தேசங்களில் இருந்து அரசவைப் பிரதிநிதிகளும், மேற்சபை உறுப்பினர்களும், இந்த அரசவை அமர்வில் நேரடியாக பங்கெடுக்க இருப்பதோடு, பல அறிஞர்களும் பங்கு பற்றவுள்ளனர்.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மூன்றாவது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை மே மாதம் 18ஆம் திகதியும் இதனைத் தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் ஏழாவது நேரடி அமர்வு இம்மாதம் மே 19 முதல் 21 வரையிலான நாட்களில் தாங்கள் வாழும் லொஸ் ஏஞ்சலெஸ் பெருநகரில் இடம்பெறவுள்ளது.

இந்த அமர்வின் முதலரங்கில் ‘ இலங்கையின் அரச கட்டமைப்புக்குள் தமிழர் உரிமை சாத்தியமா? என்ற கருப்பொருளில் கருத்தாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

இதனைவிட மேலும் இரு பேசுபொருள்களை அமர்வு கவனத்துக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.

பல்பரிமாண ஒழுங்காக மாறிவரும் உலக அரசியல் ஒழுங்கு ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கு சாதகமான வாய்ப்புகளை தருமா? என்பது குறித்து நாம் உரையாடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களை உலக அரங்கில் ஒருவலுமையமாக உருவாக்குவது குறித்த சிந்தனையும் உரையாடலும் இவ் அமர்வில் இடம்பெறவுள்ளன.

மேலும் 19ஆம் திகதி மாலை 6:30 – 8:30 வரை லொஸ் ஏஞ்செலஸ் மக்களுடன் ஒன்றுகூடல் ஒன்றும் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய விடயங்களை ஆராயும் இம் அமர்வில் தங்கள் அமைப்பும் பங்குபற்றிக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது முக்கியம் வாய்ந்தது எனவும் ஆக்க பூர்வமானது எனவும் இவ் அழைப்பைத் தாங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் எனவும் உறுதியாக நம்புகிறோம் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.