அடக்குமுறைகளின் மூலம் புதிய கட்சியின் பயணத்தை தடுக்க முடியாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதிய கட்சிக்கு ஆட்களை சேர்க்கும் போது முதலில் கட்சியில் இணைந்து கொள்வோர் பட்டியலில் தாம் முன்னணி வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் சுந்திரக் கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், புதிய கட்சியில் இணைந்து கொள்ளும் உறுப்பினர்கள் முன்னைய கட்சிகளது உறுப்புரிமை ரத்து செய்தல் மற்றும் ஏனைய அடக்குமுறைகளின் ஊடாக புதிய கட்சியின் பயணத்தை நிறுத்த முடியாது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்ள விரும்பும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களாவர்.

புதிய கட்சியில் அங்கத்துவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பான உடனேயே இவர்கள் கட்சியில் இணைந்துகொள்வார்கள்.

புதிய கட்சி அமைப்பது தொடர்பில் மாவட்ட ரீதியிலான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுடன் பத்து லட்சம் உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

புதிய கட்சியில் அங்கத்துவம் பெற்றுக்கொள்வோரை சிறையில் அடைப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரே தடவையில் பத்து லட்சம் பேரை கைது செய்ய நேரிடும் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.