வரவு செலவுத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட கருத்தரங்கு ஒன்று நடத்தப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த கருத்தரங்கை நடத்த உள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது.

அம்பாந்தோட்டை ஷங்ரீலா ஹோட்டலில் எதிர்வரும் 13 மற்றும் 14ம் திகதிகளில் இந்த கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்கவுள்ளனர்.

பிரதமர் ரணில், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் துறைசார் நிபுணர்கள் கருத்தரங்கில் பங்கேற்று வரவு செலவுத் திட்டம் குறித்து தெளிவுபடுத்தவுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவடைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகமும் நிதி அமைச்சும் கூட்டாக இணைந்து இந்த கருத்தரங்கை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.