அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் எமது நிலங்கள் விடுவிக்கப்படாது விட்டால் நாம் மரபு வழி போராட்டத்தை தொடங்குவோம் என்று நேற்று இடம் பெற்ற ஆவா குழுவின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. என்று உண்மையில் இவ்வாறு ஒரு செய்தி வெளிவந்தால் எவ்வாறு இருக்கும்?

உண்மையில் இந்த ஆவா குழு என்பது யார்? இதில் எத்தனை பேர் உள்ளனர்? இவர்கள் எங்கு ஒன்று கூடுவார்கள்?
இவர்களின் தலைவன் யார்? இவர்களின் பின்புலம் என்ன? இவ்வாறான பல கேள்விகள் எமது மனதில் உள்ளன. இவை அனைத்திற்கும் இந்த ஆவா குழு என்று பெயர் யாரால் சூட்டப்பட்டது? எதனால் சூட்டப்பட்டது என்று பார்த்தாலே இவை அனைத்திற்கும் விடை கிடைத்துவிடும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஓர் இரவு கோப்பாய் பொலிசாரால் சிலர் வாள், பொல்லுகள் மற்றும் கைக்குண்டு ஒன்றுடனும் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் தொடர்பாக மேலதிக விசாரணைக்காக கைது செய்யப்பட்டவர்கள் வசிக்கும் சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது அக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் பொலிசாரிடம் நீங்கள் ‘ஆ வாயனை’ பிடித்துவிட்டீர்கள் சந்தோசம் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ‘ஆ வாயன்’ என்றால் யார் என பொலிசார் கேட்டுள்ளனர். அப்பொழுதுதான் மக்கள் தெரிவித்துள்ளார், நீங்கள் இரவு கைதுசெய்ததில் ஒருவன் எந்தவேளையும் வாயை மூடாமல் ‘ஆ’ என்று நிப்பான். (அவனது வாய் எப்பொழுதும் ஆ என்று திறந்துதான் இருக்கும் கதைக்கும்போதும் வாய்மூடாமல் ஒருவிதமாகத் தான் கதைப்பான். இது அவனது வாயில் சிறிய குறைபாடு) 1992ஆம் ஆண்டு பிறந்த இவன் மெல்லிய தோற்றமும் பார்ப்பதற்கு சிறியவனுமாக தெரிவான். ஆனால் ஓடுவானாக இருந்தால் யாரும் பிடிக்கமுடியாதாம், மதில்கள் வீடுகள் என அனைத்தும் ஏறி ஓடுவானம். இவ்வாறு பொலிசாருக்கு மக்கள் கூறியிருக்கின்றார்கள். இந்த ‘ஆ வாயனுடன்’ கைது செய்யப்பட்ட மற்றவர்கள் அவனின் நண்பர்கள் எனவும் தெரிந்துகொண்ட பொலிசார் தமது பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு சிங்கள மொழியில் தெரியப்படுத்தும்போது ‘ஆ வாய்’ என்பதனை ‘ஆவா’ என்று உச்சரித்தனர். இதன்மூலமாக பொலிசார் தாங்கள் ‘ஆவா’ குறூப் ஐ பிடித்துவிட்டோம் என தமக்குள் பேசிக்கொண்டனர். இதன்மூலமே ‘ஆவா’ பெயர் உருவானது.

இதில் இன்னொரு முக்கிய விடயம் இந்த ஆ வாயன் என்கின்ற ஆவா தற்பொழுதும் சிறைக்குள்ளேயே இருக்கின்றான், இவனை தற்போது அனுராதபுரம் சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தெரிய வருகின்றது. ஆனால் இவனுடன் சேர்ந்து முக்கிய நண்பர்களான மூன்று பேர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர்கள் பொலிசாரிடம் சிக்காமல் தலைமறைவாகவே வாழ்கின்றனர். ஆனால் இவர்கள் தற்போது அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெட்டி கொல்லப்பட்ட பஸ் சாரதி கொலை சந்தேக நபர்களாகவும் காணப்படுகின்றனர். மேலும் இவர்களில் ஒருவன் கொக்குவில் பகுதியில் வைத்து பொலிசார் ஒருவரை வெட்டுவதற்கு கோடாலியுடன் துரத்தி சென்றதும் அதன்பின்னர் மறுநாள் குறித்த நபரினை பொலிசார் கைது செய்வதற்காக சென்றபோது தப்பிஓடும் போது பொலிஸ் அவனுக்கு காலில் சுடப்பட்டு காயம் ஏற்பட்டபோதும் அந்த காயத்துடனேயே தப்பி சென்றுவிட்டான், ஆனால் இதுவரை அந்த சுடப்பட்ட காயத்திற்கு எப்படி மருந்து கட்டினான் இதற்கு யார் அடைக்கலம் கொடுத்தார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இந்த ஆவா என்கின்ற 24 வயதுடைய ஆ வாயன் தனது 20வயதில் மதுபான சாலையில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது பின்னர் போதை தலைக்கு ஏற மதுபான சாலையில் பக்கத்து மேசையில் இருந்து குடிப்பவர்களுடன் சண்டையிட்டு அவர்களை தாக்குவது, இதனால் மதுபான சாலை உரிமையாளருக்கு பெரிய சங்கடமாக இருந்தது. இதன்பின்னர் மதுபான சாலை உரிமையாளர் இவனுக்கு மதுவினை இலவசமாக கொடுத்து அங்கு வரவேண்டாம். போத்தலை கொண்டே வேறு இடம் குடிக்க சொன்னார். இது ஆ வாயன் இற்கு ஒரு புத்துணர்வை கொடுத்தது. தனக்கு பயத்தில் இப்படி இலவசமாக தனக்கு சாராய போத்தல் தருகின்றார்கள் என்று. இதன்மூலம் தான் சண்டித்தனம் செய்தால் தனக்கு பணமும் கிடைக்கும் என தெரிந்து இதனையே ஒரு தொழிலாக தொடங்கினான் ஆவா.

இதில் இவனின் சண்டிதனத் தொழிலிற்கு பிரதான வாடிக்கையாளர்களானது பாடசாலை மாணவர்களாகும். அதிலும் விசேடமாக வசதிபடைத்த மானவர்கள் இவனின் நண்பர்களாகினர். அவ்வாறான மாணவர்களிடம் ஏன் இவனுடன் சேருகின்றீர்கள் எனக் கேட்டால் மோட்டார் சைக்கிள்களில் முதுகு பக்கத்தில் வாளும் வைத்துக்கொண்டு றோட்டில் போகும்போது எல்லோரும் எம்மை பாத்து பயப்பிடுவார்கள். அதேபோல் எம்முடன் கல்வி கற்கும் பெண்களுக்கு நாங்கள் ஒரு கீறோ போல தெரிவோம், அதேபோல நாம் லவ் பண்ணும் பெண்ணை வேற யாரும் நெருங்கமாட்டார்கள். இது எங்களுக்கு ஒரு கௌரவம்போல் இருக்கின்றது என்கின்றார்கள். இதற்கு பிரதிபலனாக ஆவா விற்கு நீங்கள் என்ன செய்வீர்கள் எனக் கேட்டதற்கு தாங்கள் தமது வீட்டில் பணத்தினை களவெடுத்தோ அல்லது ரியூசன் காசு அல்லது எக்ஸ்ம் பேப்பரிக்கு, புத்தகத்திற்கு எனச் சொல்லி பணம் வாங்கி அதனை ஆவாவிற்கு சாராயம் வாங்கி கொடுப்போம், எமது மோட்டர் சைக்கிளை அவன் பாவிப்பதற்கு கொடுப்போம் என்கின்றார்கள். இதுதான் ஆவாவும் அவனை சுற்றி உள்ள கூட்டமும்.

இங்கு காணப்படும் ஆவாய் என்கின்ற ஆவாவை போலவே ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு சண்டியர்கள் காணப்படுகின்றனர். அதற்கு ஒவ்வொறு பெயர்களும் உள்ளன டில்லு, வினோதன், ஐக்சன் எனப் பல பெயர்கள் உள்ளன. ஆனால் ஒவ்வொருவரும் செய்யும் பிரதான தொழில்கள் வேறு வேறு. அதாவது ஒரு குறூப் கஞ்சா விற்கும், இன்னொரு குறூப் வாகன புறோக்கர் வேலை, இன்னொரு குறூப் கட்டுபணம் செலுத்தாத லீசிங் வாகனங்களை பறித்து லீசிங் கொம்பனிகளுக்கு கொடுத்தல் போன்ற இடை தரகர்வேலைகளையே இவர்கள் செய்வது.

இங்கு காணப்படும் இந்த குறூப்புகளுக்கிடையே ஓர் ஒற்றுமை காணப்படுகின்றது. அது எவ்வாறெனில் இவர்கள் தமக்கு தெரிந்தவர்களை தாக்கவேண்டுமாக இருந்தால் தாம் செல்லாமல் வேறு பிரதேசத்தில் உள்ள ஒரு சண்டியனை அழைத்து அவர்களுக்கு பணத்தினை கொடுத்து அவர்களை கொண்டு தாக்குவது. ஏனெனில் தாம் பொலிசாரில் சிக்கிக்கொள்ளாமல் தப்புவதற்காக செய்யப்படும் ஒரு வித்தை இதுவாகும். அதேபோல் மற்றைய பிரதேசத்தில் உள்ளவனுக்காக அவனிடம் பணத்தினை வாங்கிகொண்டு இவர்கள் போய் தாக்குவார்கள். ஆனால் தாக்குதலுக்கு உள்ளானவர் பொலிசாருக்கு தகவல் சொல்லும்போது தனது பகையாளியை தான் சந்தேகத்தில் சொல்லுவார். அவரால் தன்னை தாக்கியவன் யார் என அவருக்கு தெரியாது. அதனால் அவன் அதுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று தப்பிவிடுவான்.

இவ்வாறாக பணத்திற்கு சண்டித்தனம் செய்யும் குறூப்பில் ஆவாவின் சிறப்பு அம்சம் என்னவெனில், ஆவா யாருக்காவது வாளால் வெட்டுவதற்கோ அல்லது தாக்குவதற்கோ சென்றால் குறித்த இடத்தில் 5 நிமிடங்களுக்கு மேல் அங்கு நிற்பது இல்லை. அதேபோல் அந்த 5 நிமிடத்தில் தான் வெட்டவேண்டிய ஆள் நிக்குதோ?, இல்லையோ? அவ்விடத்தில் நிப்பவர்கள் எல்லோருக்கும் வெட்டி அங்கு இருக்கும் சொத்துக்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றுவிடுவர். இது ஒரு மின்னல் வேகத்தில் நடந்து முடிந்துவிடும். அதேபோல் மோட்டார் சைக்கிள்களில் வரும்போதும் போகும்போதும் வாள்முனையினை றோட்டில் அமத்தி பிடித்து கொள்வார்கள். இதன்போது வீதியில் நெருப்புப்பொறி பறக்கும். இதனால் அந்த பிரதேசமே அச்சத்தில் ஆழ்ந்துவிடும்.

ஆவாவின் இந்த 5நிமிட தாக்குதலினால் அவர்களை அடையாளம் கண்டு கொள்வதே கடினமாக இருக்கும். அதேநேரம் அந்த பிரதேசமே அச்சத்தில் உறைந்துவிடும். இந்த 5 நிமிடத் தாக்குதல் ஓர் நல்ல தாக்குதல் முறை என கண்ட அனைத்து ரவுடிகளும் தாமும் அதனையே பின்பற்ற தொடங்கி விட்டனர். இதனால் யார் செய்தாலும் இந்த தாக்குதல் முறைக்கு ஆவா குழு தான் செய்தது என பெயர்பெறத் தொடங்கிவிட்டது. இதனாலேயே எங்கு வெட்டுப்பாடு நடந்தாலும் அது ஆவா குழு என்று பெயர் வர தொடங்கியுள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்கையில், இன்று ஆவா குழு பற்றி நாடாளுமன்றில் கதைக்கும் அளவு ஓர் பெரிய பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு காரணம் என்ன? இதற்கு உண்மையிலேயே பின்னணியில் இருப்பவர்கள் யார்? இதில் யார் யார் அரசியல் லாபம் தேடுகின்றார்கள்? சாதாரண மக்களின் நிலைமை என்ன? என்பதனை அடுத்து வரும் நாட்களில் பார்;போம்……