சிறுபான்மை இன மக்கள் மீது இனவாத தாக்குதலை மேற்கொண்ட மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அட்டம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இது தொடர்பில் உறுதியளித்துள்ளார்.

குறித்த பிக்கு அண்மைய காலமாக செயற்பட்டு வரும் விதம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசனால் நீதியமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இவ் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

சட்டவாட்சிக்கும், இயல்பு நிலைக்கும் எதிராகச் செயற்படும் சுமணரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால், நல்லாட்சி மீது மக்கள் நம்பிக்கை இழக்க வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளதென இதன்போது சுட்டிக்காட்டிய ஸ்ரீநேசன், அமைதியான சூழலைக் குழப்பி மீண்டும் இனவாதச் சூழலை உருவாக்கி காட்டாட்சி ஒன்றினை உருவாக்குவதற்கு ஏற்ற விதத்தில் குறித்த விஹாராதிபதி செயற்பட்டு வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் பௌத்த மதத்தின் தர்மத்தினை சொல்லாலும், செயலாலும் விளக்கவேண்டிய தேரர் அதனை விடுத்து பௌத்தத்தின் மகத்துவத்தினையும், புனிதத்தையும் குறைக்கக் கூடிய விதத்தில் செயற்படுவதுடன் சிறுபான்மை இனத்தையும் மக்களையும் மிகவும் இழிவாகப் பேசிவருகின்றார் என்றும் ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றை பார்க்கும்போது, குறித்த பிக்குவிற்கு பின்னால் சில அரசியல்வாதிகள் உள்ளதாக சந்தேகம் வெளியிட்ட ஸ்ரீநேசன், தேரரின் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் மட்டக்களப்பில் மட்டுமன்றி ஏனைய மாவட்டங்களிலும் பெரும் விபரீதங்கள் ஏற்படுமென நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.