இலங்கையின் ஒரு பகுதி கடலில் மூழ்கும் அபாய நிலையில்!!! வெளியான புதிய பீதி…

கிழக்கிலங்கையின் வரலாற்று புகழ்மிக்க திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் மற்றும் அப்பகுதியிலுள்ள குடியிருப்புக்கள் யாவும் கடலரிப்பினால் கடலில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அப்பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பின்னர் கிழக்கில் கடலரிப்பு ஏற்பட ஆரம்பித்தது.

கடந்த ஒரு வருடத்திற்குள் அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் தொடக்கம் பொத்துவில் எல்லை வரையான கரையோரப் பிரதேசத்தில் கடலலையின் சீற்றம் மிகவும் உக்கிரமடைந்துள்ளதால் கடலரிப்பு அதிகமாகியுள்ளது.

திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆலையடி கடற்கரை பகுதியில் இருந்து விநாயகபுரம் வரையான பிரதேசம் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு அருகிலுள்ள மீனவர் கட்டிடம், அதனோடு இணைந்த கிணறு மற்றும் கடற்கரை வீதியும் கடலால் அரிக்கப்பட்டு நீரில் மூழ்கியுள்ளன.

இதேவேளை கடற்கரையில் உள்ள திருக்கோவில் மயானம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் உள்ள தென்னைமரங்களும் கடலினுள் மூழ்கியுள்ளன.

அத்தோடு, ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் முன் வீதியின் பிரதான கதவில் இருந்து 25 மீற்றர் தூரத்திற்கு கடல் முன்னோக்கி வந்துள்ளது. இவ்வாறான நிலையில் ஒரு சில மாதத்திற்குள் கோயில் மற்றும் அப்பகுதியிலுள்ள குடிமனைகள் யாவும் கடலில் மூழ்கும் அபாய நிலையை எதிர்கொண்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்து ஏற்கனவே உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தெரிவித்துள்ள மக்கள், குடியிருப்புகளும் ஆலயமும் கடலில் மூழ்குவதற்கு முன்னர் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.