யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் முறையற்ற வகையில் சரியான பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளாது கிணறு வெட்டியதையடுத்து நிலமானது கீழ் இறங்கி அருகில் இருந்த வீடொன்று உடைந்து வீழ்ந்துள்ளது.

இச் சம்பவமானது நேற்றுமுன்தினம் இரவு யாழ்.தெல்லிப்பழை வறுத்தலைவிளான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் ஜே.241கிராம சேவகர் பிரிவில் மீள்குடியேற்றப்பட்ட நிலையில் குடும்பமொன்று வீட்டுத்திட்ட நிதியினை பெற்று வீடொன்றை கட்டியுள்ளனர்.

இதன்போது குறித்த பகுதிக்கு நீர் வசதியை பெற்றுக்கொடுக்கும் வகையில் குறித்த கிராம சேவகரால் குறித்த வீட்டு உரிமையாளருடைய காணியில் ஒரு பகுதியை பொதுக் கிணறு ஒன்றை அமைப்பதற்காக பெற்றுள்ளார்.

இதனையடுத்து கடந்த மார்கழி மாதம் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதன்போது கிணறு வெட்டுவதற்காக கணகரக வாகனங்களும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டிருந்தது.

அத்துடன் கிணறு அமைப்பதற்காக மண்ணானது வெட்டி அகற்றப்பட்டே கிணறு கட்டுமாணங்கள் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து கிணறு கட்டுமான பணிகள் நிறைவடைந்த போதும் அதற்காக வெட்டி அகற்றப்பட்ட மண்ணானது சரியான முறையில் மீண்டும் கொட்டப்பட்டிருக்கவில்லை.

இதன் காரணமாக கடந்த சில தினங்களாக பெய்துவரும் கண மழை காரணமாக குறித்த கிணற்றை சுற்றியுள்ள மண்ணானது கீழ் இறங்கி கிணற்று கட்டுமானங்கள் உடைந்து காணப்பட்டுள்ளது. இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரால் கிராம சேவகர் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலர் ஆகியோருக்கு கடிதம் ஊடாக தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக நேற்றுமுன்தினம் இரவு குறித்த நபரது வீட்டின் ஒருபகுதி இடிந்து வீழ்ந்துள்ளது. கிணற்றுக்காக கணகரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வீடமைந்துள்ள பகுதிகளில் உள்ள மண்ணானது வெட்டி அகற்றப்பட்டு பின்னர் அது உரிய முறையில் மீள் நிரப்படாமையே வீடு இடிந்து வீழ்ந்ததுக்கு காரணம் என அவ் வீட்டின் உரிமையாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மீண்டும் கிராம சேவகருக்கு தெரியப்படுத்தியிருந்த போதும் அவர் இவ் விடயம் தொடர்பாக மாவட்ட அரச அதிபருக்கு தெரியப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பகுதியில் மிக நீண்ட வருடங்களுக்கு பின்பு மீள் குடியேற்றப்பட்டு தற்போதே வீட்டு திட்டத்தை பெற்று கட்டப்பட்ட வீடானது முறையான பாதுகாப்பு இன்றி அரசாங்கமானது கிணறு வெட்டியதால் தமது வாழ்விடம் அழிந்து விட்டதாக வீட்டின் உரிமையாளர் கடுமையான கவலையையும் விசனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் இச் சம்பவம் தொடர்பாக உடனடியாகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து தமது வீட்டினை மீள் அமைத்து தரவேண்டும் எனவும் குறித்த பகுதியின் தரையானது எதிர்காலத்திலும் கீழ் இறங்காத வகையில் செப்பணிட்டு தரப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்

 

fb_img_1479721778470fb_img_1479721781039