இலங்கையை சேர்ந்த இளைஞனை நான்கு வருடங்களாக காதலித்த சீன யுவதி ஒருவர், இளைஞனை தேடி இலங்கைக்கு வந்துள்ள சம்பவம் நாவலப்பிட்டி பிரதேசத்தில் நடந்துள்ளது.

சீன யுவதி ஜப்பானில் ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில் புரிந்து வருவதுடன் இலங்கையை சேர்ந்த இளைஞன் தென் கொரியாவில் தொழில் புரிந்து வருகிறார்.

இளைஞன் ஜப்பானுக்கு சென்றிருந்த போது யுவதிக்கு அறிமுகமாகியுள்ளதுடன் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இலங்கைக்கு சென்று மீண்டும் ஜப்பான் திரும்பி யுவதியை திருமணம் செய்து கொள்வதாக இளைஞன் வாக்குறுதியளித்துள்ளார்.

வாக்குறுதியளித்தபடி இளைஞன் ஜப்பான் வராத காரணத்தினால், சீன யுவதி இலங்கைக்கு வந்துள்ளார்.

இலங்கை வந்த யுவதி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளைஞனிடம் கேட்டுள்ளார். இளைஞன் அதற்க்கு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து யுவதி நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கு முன்னரும் சீன யுவதி இலங்கைக்கு வந்துள்ளதுடன் இளைஞனின் வீட்டில் தங்கியிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீன யுவதி,

“ நான் நான்கு வருடங்களாக இவரை காதலித்து வருகிறேன். திருமணம் செய்வதாக வாக்குறுதி வழங்கியதால், நாங்கள் நெருங்கி பழகினோம். இலங்கை சென்று திரும்பியதும் திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.

அவர் வரவில்லை. இதனால், நான் அவரை தேடி வந்தேன். அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது. அவரை என் உயிரை விட அதிகமாக நேசிக்கின்றேன். எப்படியாவது அவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்.

அவருக்காகவே நான் இலங்கை வந்தேன். நான் அவரது வீட்டுக்கு சென்ற போது என்னை அவர் புறக்கணித்தார். வெளியில் சென்று எங்கே தங்கி விட்டார். அவர் வரும் வரை நான் வீட்டில் காத்திருந்தேன்.

எனினும் அவர் வரவில்லை. அவரது தாயும் தந்தையும் நல்லவர்கள். என்னை நன்றாக உபசரித்தனர்“ எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இளைஞன் தெரிவிக்கையில்,

“சீனப் பெண்ணை திருமணம் செய்வதில் எனக்கு விருப்பம். எனினும் திருமணம் செய்த பின்னர் இலங்கையில் வசிக்க அவர் விரும்பவில்லை. அது மாத்திரமல்ல நாவலப்பிட்டியில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்து விட்டு பணத்தை எடுத்துக்கொண்டு அவருடன் அவரது நாட்டில் குடியேற வருமாறு கூறுகிறார்.

சொத்துக்களை விற்பனை செய்ய எனக்கு விரும்பமில்லை. நான் என் பெற்றோரை கவனிக்க வேண்டும். இலங்கையில் குடியேற விரும்பினால், நான் திருமணம் செய்து கொள்வேன். இல்லையென்றால் முடியாது” என இளைஞன் கூறியுள்ளார்.

சீனாவில் பெற்றோர் தனியாக வசிப்பதால், அவர்களை தனித்து விட முடியாது எனக் கூறி இளைஞனின் யோசனைக்கு யுவதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இளைஞனும் சீன யுவதியும் இணக்கப்பாட்டுடன் பிரிய சம்மதித்துள்ளனர். கடினமாக இருந்தாலும் இளைஞனை மறக்க முயற்சிப்பதாக சீன யுவதி தெரிவித்துள்ளார்.

மேலும் மீண்டும் இளைஞனை தேடி தான் இலங்கை வரப் போவதில்லை எனவும் யுவதி குறிப்பிட்டுள்ளார்.

சீன யுவதி நாளைய தினம் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார். அது வரை தங்குமிட வசதிகளை வழங்க இளைஞனின் பெற்றோர் இணங்கியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸ் முறைப்பாட்டை திரும்ப பெற்ற யுவதி, இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் வரை இளைஞனின் வீட்டில் தங்கியிருக்க அவரது வீட்டுக்கு சென்றதாக நாவலப்பிட்டி பொலிஸார் கூறியுள்ளனர்.