கிரிதலே இராணுவ முகாமினால் கருணா பிரிவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கியினாலே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாவலர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக பிரதி மன்றாடியார் நாயகம் ரொஹான் அபேசூரிய நேற்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன் அறங்கூறுனர் சபைக்காக 7 பேர் பரிசூதிய முறையில் தெரிவு செய்யப்பட்டனர்.

கிரிதலே இராணுவ முகாமினால், தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் பிரிவிற்கு ரீ.56 ரகத்தை சேர்ந்த 150 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதி மன்றாடியார் நாயகம் இதன்போது தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மூன்று பேருக்கான குற்றபத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.