இரு லொத்தர் சபைகளும் ரவி கருணாநாயக்கவுக்கு மீண்டும் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் அவருக்கு சுரண்டிப் பிழைக்க இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

ஏற்கனவே நிதியமைச்சராக இருந்தபோது லொத்தர் விவகாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ரவி கருணாநாயக்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரான பின்னரும் இரு லொத்தர் சபைகளும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டிருப்பதன் தாற்பரியம் புரியவில்லை.

அமைச்சர்களை மாற்றுவதும் அவர்களுக்கான பொறுப்புகளை வழங்குவதும் வெறும் கேலிக்கூத்தாகிப் போய்விட்டதே தவிர, நாட்டினதும் மக்களினதும் எதிர்காலம் கருத்திற்கொள்ளப்படவில்லை.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு சற்றும் பொருத்தமில்லாத பொறுப்புகள் ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கப்பட்டிருப்பது அவர் மென்மேலும் சம்பாதித்துக்கொள்ளட்டும் என்பதற்காகவே.

இவ்வாறான அர்த்தமற்ற நடவடிக்கைகளால் நாட்டின் எதிர்காலம் மேலும் இருண்டுகொண்டே செல்கிறது. விடிவொன்று வேண்டுமானால் இந்த அரசு மாறியே தீரவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.