பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 28ஆம் திகதி பாரிய பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகத் தெரியவருகின்றது.

நீண்ட காலமாக இழுபறியில் இருக்கும் தங்களது சம்பளப் பிரச்சினை, உயரதிகாரிகளின் பாரபட்சமான எதேச்சதிகாரப் போக்குகள், பழிவாங்கல்கள், அடக்குமுறைகள் போன்றவற்றுக்குத் தீர்வு காண்பதற்காகவே இந்தப் போராட்டம்

முன்னெடுக்கப்படவுள்ளதாக பொது சேவையாளர் சங்கத்தின் தலைவர் மாலக சில்வா தெரிவித்துள்ளார்.

“மின்சாரசபையின் பெரும்பாலான ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும்போது பொறியியலாளர்களுக்கு ‘ஈ’ ஸ்கேல்’ முறையில் கொழுத்த சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான அநீதிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து கடந்த காலங்களில் தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் பல்வேறு முறைகளில் பழிவாங்கப்பட்டு வருகிறார்கள். சபையின் தலைவரின் கீழ் இயங்கி வந்த உள்ளக கணக்காய்வாளர் பிரிவும் சட்டப்பிரிவும் பொதுமுகாமையாளருக்குக் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இத்தகைய அநீதிகளைத் தொடர்ந்தும் சகித்துக்கொண்டிருக்க முடியாத நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி நாங்கள் விஹாரமகாதேவி திறந்த வெளியரங்கில் கூடி எமது எதிர்ப்பைத் தெரிவிக்கவுள்ளோம்.

அரசு தொடர்ந்தும் எங்களது போராட்டத்துக்கு செவிசாய்க்காமல் அடம்பிடித்தால் நாடளாவிய ரீதியில் பாரிய பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.