இலங்கை இந்திய நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாட்டின் சென்னையில் வடித்த எட்டு அடி உயரமான 16 திருவள்ளுவர் திருவுருவச் சிலைகள் இலங்கையின் 16 மாவட்டங்களில் நிறுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

உலக தமிழ்ச் சங்கமும், இலங்கை தமிழ்ச் சங்கமும் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

குறித்த திருவுருவச் சிலைகள் முதற்கட்டமாக இலங்கையில் புத்தளம், மன்னார், முள்ளியவளை, கிளிநொச்சி, சாவகச்சேரி, புளியங்குளம், மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களிலுள்ள பாடசாலைகளில் நிறுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை சிவசேனையின் தலைவர் மறவன் புலவு க. சச்சிதானந்தனின் வேண்டுகோளை ஏற்று உலகத் தமிழ்ச்சங்கத்தின் தலைவரும், தொழிலதிபருமான வி. ஜி. சந்தோசம் குறித்த சிலைகளை வடித்து அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

குறித்த திருவுருவச் சிலைகளின் திறப்பு விழா நாளை மறுதினம் 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக எட்டு மாவட்டங்களிலும் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கைக்கு வந்துள்ள திருவுருவச் சிலைகளைப் பொறுப்பேற்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் 16 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைப்பதற்குமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

குறித்த திருவுருவச் சிலைககளின் திறப்பு விழா நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வி.ஜி. சந்தோசம் தலைமையில் நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், தமிழறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என 33 பேர் கொண்ட குழுவினர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இலங்கை சிவசேனையின் தலைவர் மறவன் புலவு க. சச்சித்தானந்தன் தெரிவித்துள்ளார்.

உலகின் பல இடங்களிலும் வி. ஜி. சந்தோசம் அவரின் முயற்சியினால் இதுவரை பல திருவுருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.