விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணக் கொடுப்பனவுகள் சீராக வழங்கப்படவில்லை எனவும், அரசாங்கம் தம்மை ஏமாற்றி விட்டதாகவும் வடமாகாண விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த காலபோக நெற்பயிர்செய்கை வறட்சி காரணமாக அழிவடைந்தமையால் விவசாயிகள் பலரும் கடுமையாக பாதிப்படைந்தனர்.

இந்த நிலையில் பாதிப்படைந்த வடமாகாணத்தைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவிக்கையில்,

விவசாய அழிவிற்கான கொடுப்பனவாக ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபா வீதம் வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்தனர்.

பின்னர் மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் வீதம் மாதாந்தம் வறட்சிக் கொடுப்பனவு 6 மாதங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கு இலக்கத்திற்கு 8 ஆயிரத்து 650 ரூபா மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், இரண்டு மாதங்கள் கடந்தும் அடுத்த கொடுப்பனவுகள் எவையும் இதுவரை வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், வறட்சியான காலநிலை நீடிப்பதால் விவசாயிகள் காலபோகம் மட்டுமின்றி, சிறுபோகம் கூட மேற்கொள்ள முடியாது வறுமையில் வாடுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.