வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் தலைவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், இனவாதத்தை பரப்புகின்ற யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டால் உண்மையை தெரிந்துகொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நுகேகொடையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்திற்கு சென்றால் இனவாத குழுக்களை கைது செய்ய முடியும். அங்குதான் அனைவரும் இருக்கின்றனர்.

மிக பெரிய இனவாதியான வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அங்குதான் இருக்கின்றார். இனவாதிகள் தெற்கில் இருக்கின்றனர் என யார் கூறியது? எனவும் அவர் இதன் போது கேள்வியெழுப்பியுள்ளார்.

விக்னேஸ்வரனே இனவாதப் பேச்சுக்களை பேசுகின்றார். அவரை கைது செய்யப்பபோவதாக யாரும் கூறியிருக்கின்றனரா..? எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, பொது பலசேனா அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டையும் கோத்தபாய ராஜபக்ச மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.