தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தவர்கள். இதில் ஒரு பகுதியினர் உயிரிழப்புக்கள்,சொத்தழிவுகள், உறவுகளின் பிரிவுகள் என தாங்க முடியாத துன்பத்தைத் தாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சிலர் கிரந்தம் விடுவதைக் காணும் போது இதயம் வெடித்து விடும் போல் உள்ளது. இன்று வடக்கு மாகாண சபை தனது முழுச் சிந்தனையையும் எதற்காகச் செலவிடுகிறதென்பது அனைவருக்கும் தெரிந்ததே.

வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தைக் குழப்ப நினைத்தவர்கள் மாகாண சபையின் செயலாக்கத்தை எங்கோ கொண்டுபோய் விட்டனர்.இதனை அவர்கள் தமக்கான வெற்றி என்று நினைக்கலாம். ஆனால் இது வெற்றி அன்று.

வடக்கின் முதலமைச்சர் மீது பழி சுமத்தவும் அவரின் காலத்தில் மாகாண சபை திறம்பட இயங்கவில்லை என்பதை காட்டுகின்ற நோக்கத்தோடும் வடக்கு மாகாண சபையில் உறுப்பினர்கள் சிலர் திட்டமிட்டுச் செயற்படுகின்றனர்.

ஒரு கனதியான முதலமைச்சர் வாய்க்கப் பெற்ற சந்தர்ப்பத்தை நல்ல முறையில் பயன்படுத்தி எங்கள் மக்களுக்கு செய்யக்கூடிய நன்மைகளைச் செய்வோம் என்று நினைக்காமல், வடக்கு மாகாண சபையைக் குழப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எந்தளவு தூரம் தொந்தரவு கொடுக்க முடியுமோ அந்தளவுக்குத் தொந்தரவு கொடுப்பதை நோக்காகக் கொண்டவர்களின் கபடத்தனத்தால் தமிழ் மக்கள் எந்த நன்மைகளையும் பெற முடியாதவர்களாக உள்ளனர்.

ஆனால் ஒன்றை மட்டும் சொல்ல முடியும். இந்த உலகத்தில் எழுந்த அத்தனை காவியங்களும் இதிகாசங்களும் தர்மத்தைப் போதிப்பதற்கானவை.

மகாபாரதமாயினும் சரி, இராமாயணமானாலும் சரி அனைத்தும் அதர்மம் செய்தவர்கள் தங்களால் அழிந்து போவதை எடுத்துக் காட்டுவதாகும்.

மகாபாரதம், இராமாயணம் என்றெல்லாம் நீண்ட தூரம் செல்ல வேண்டாம். அண்மையில் ஓகோ என்று வெளியாகிய பாகுபலி படத்தின் கருப்பொருளே அதர்மம் அழிவதும் தர்மம் நிலைப்பதும்தான்.

தன் மகன் பல்வாள்தேவன், மகிழ்மதியை ஆளவேண்டும் என்பதற்காக அவன் தந்தை செய்த நாசகாரங்கள், அக்கிரமங்கள் கொஞ்சமல்ல. ஆனால் ஈற்றில் நடந்தது என்ன?

மகனை மகனின் மகனை இழந்து மகேந்திர பாகுபலிக்கு நடந்த பட்டாபிசேகத்தில் பிங்கலத் தேவரே இராஜ முடியை எடுத்துக் கொடுக்கின்ற நிலைமையில் இருந்தாரே.

இதைப்படம் என்று யாரும் நினைத்து விடக் கூடாது. இதுவே இயற்கை. இதுவே இறைவன்.

இதை மறந்து எந்த வழியிலும் வடக்கின் முதலமைச்சருக்கு இடுக்கண் கொடுத்து அவரை செய்ய விடாமல் செய்கிறேன் பார் என்றால் நிச்சயம் அதற்கான தண்டனையை இயற்கை வழங்கியே தீரும். இது சர்வ நிச்சயம்.