இலங்கையின் தடுப்பிலுள்ள தமிழக மீனவர்களையும், அவரிகளின் படகுகளையும் விடுவிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியப் பிரதமருக்கு இன்று எழுதியுள்ள கடிதமொன்றிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகமொன்றை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் தடுப்பில் 135 தமிழக மீனவர் படகுகள் உள்ளன. 2015 இல் 61 படகுகளும், 2016 இல் 53 படகுகளும், 2017 இல் 21 படகுகளும் என தடுத்துவைக்கப்பட்ட இந்த 135 படகுகளும் இலங்கை வசம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர் படகுகளை விடுவிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் இலங்கை அரசாங்கம் உள்ளதால், வறுமையிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தமிழக முதலமைச்சர் இந்தியப் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

படகுகள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் அவை பாதிப்படையக் கூடும்.

எனவே, இந்த விடயம் தொடர்பாக இலங்கையுடன் உடனடியாக கலந்துரையாடி தடுப்பிலுள்ள 135 மீன்பிடி படகுகளையும், 11 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.