படையினரை பயன்படுத்தும் அளவிற்கு நாட்டில் பிரச்சினைகள் ஏதும் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

எனினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் அனைத்து விடயங்களிலும், பொலிஸாருக்கு முப்படையினர் ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டின் சில பகுதிகளில் சிறு சிறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவை தொடர்பில் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், குறித்த சம்பவங்கள் தொடர்பிலான விசரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், முஸ்லிம் கடையொன்றுக்கு தீ வைத்துள்ளதாக தெரிவித்தும், விகாரையின் பிக்கு மீது தாக்குதல் என்று குறிப்பிட்டும் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும், அவை அந்தளவிற்கு பயங்கரமான விடயமல்ல என்று கூறியுள்ளார். எவ்வாறாயினும், அவ்வாறான செய்திகளை ஊடகங்கள் வெளியிடாமல் இருப்பது நல்லது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.