யாழ். வறுத்தலைவிளான் அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு யாழ். வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றுள்ளது.

யாழ். வணிகர் கழகர் கழகப் பணிமனையில் வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் குறித்த பாடசாலை மற்றும் பாடசாலையுடன் இணைந்த வகையில் இயங்கி வரும் முன்பள்ளியைச் சேர்ந்த 26 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும், சப்பாத்துக்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி பாடசாலை மாணவர்கள் சார்பாக அதிபர் எஸ். திலகதீபன் யாழ். வணிகர் கழக நிர்வாகிகள், நன்கொடையாளரிடமிருந்து கற்றல் உபகரணங்களைச் சம்பிரதாயபூர்வமாகப் பெற்றுக் கொண்டார். அத்துடன் 26 மாணவர்களுக்குமான சப்பாத்துக்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் கற்றல் உபகரணங்களுக்கான நிதிப்பங்களிப்பினை வர்த்தகர் ஜே.எஸ்.எ.நிக்ஸன், சப்பாத்துக்களுக்கான நிதிப்பங்களிப்பினை வர்த்தகர் ஆர்.ஜெயராஜாவும் வழங்கியுள்ளனர்.

இந்த நிகழ்வில் யாழ். வணிகர் கழகத்தின் செயலாளர் இ.ஜனக்குமார், வணிகர்கழகத்தின் நிர்வாகிகள், உதவிகளை வழங்கிய நன்கொடையாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து கடந்த வருட நடுப்பகுதியில் குறித்த பாடசாலையும் அதனை அண்டியுள்ள பகுதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி பாடசாலையில் தரம்-01 முதல் 05 வரையான மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன் இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் வறுமைக்கோட்டுக்குட்பட்டவர்களாகவும் காணப்படுகின்றனர். அத்துடன் இந்தப் பாடசாலை அடிப்படை வசதிகள் எதுவுமின்றியும் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் பாடசாலை அதிபர் எஸ்.திலகதீபன் யாழ். வணிகர் கழகத்திடம் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று யாழ். வணிகர் கழகம் குறித்த பாடசாலைக்குப் பல்வேறு உதவிகளை வழங்க முன்வந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.