நாட்டில் மூன்று தசாப்த காலம் நீடித்த யுத்தம் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டமும் ஒன்றாகும்.

இந்த யுத்தம் முடிவுற்று இற்றைக்கு எட்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும், இம்மாவட்ட மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு இற்றை வரையும் தீர்வு காணப்படாதுள்ளது. அதேநேரம் பலவித பிரச்சினைகள் யுத்தம் முடிவற்ற பின்னர் தோற்றம் பெற்றுள்ளன.

குறிப்பாக யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள், யுத்தம் முடிவுற்றும் பொதுமக்களின் காணிகளைப் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தும் வைத்திருக்கின்றமை, பாதுகாப்புப் படையினர் விடுவித்துள்ள காணிகளில் மீள்குடியேற்றத்தில் தொடரும் தாமதம், மயிலிட்டி துறைமுக விஸ்தரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்கள், இரணைதீவில் ராடர்கள் பொருத்தப்பட்டுள்ளதால் மக்களை மீளக்குடியமர்த்துவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான பொருத்து வீடுகள் எனப் பல விதப் பிரச்சினைகள் தொடர்ந்தும் நீடித்த கதையாகவே இருந்து வருகின்றன.

யுத்தம் முடிவுற்றும் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருப்பதானது அவை மக்களின் இயல்பு வாழ்வைப் பெரிதும் பாதித்துக் கொண்டிருக்கின்றது என்பதுதான் அர்த்தம்.

குறிப்பாக பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படாமையால் அக்காணிகளின் உரிமையாளர்கள் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களில் தங்கி இருக்கின்றனர்.

அதேநேரம் யுத்த காலத்தில் காணாமல் போயுள்ளவர்கள் என்ன ஆனார்கள் என்பது தொடர்பில் இற்றை வரையும் உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாதுள்ளது.

அதனால் காணாமல் போனவர்களில் பலர் உயிரோடு இருக்கலாம் என உறவினர்கள் இற்றை வரையும் நம்பும் நிலைமை நீடித்து வருகின்றது.

இவ்வாறு பல்வேறுபட்ட பிரச்சினைகளுடனேயே யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்களது இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விஷேட கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அதேநேரம், காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பிலும் கலந்து கொண்டார்.

குறிப்பாக மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விஷேட கூட்டத்தின் போது யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் தமது மாவட்ட மக்கள் முகம் கொடுத்துள்ள பல்வேறு பிரசினைகளையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

குறிப்பாக பொருத்து வீட்டுத் திட்டம், வீதி நிர்மாணத்திற்குத் தேவையான கிரவல், கட்டட நிர்மாணத்திற்குத் தேவையான மணல் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதில் நிலவும் நெருக்சகடி, வலிகாமம் வடக்கில் தனியாரின் காணிகளை யுத்தம் முடிவுற்ற பின்னரும் படையினர் தொடர்ந்தும் வைத்திருக்கின்றமை, விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் அவற்றின் உரிமையாளர்களை மீளக்குடியேற்றுவதில் நிலவும் தாமதம் உள்ளிட்ட பல விடயங்களையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அத்தோடு காணாமல் போனவர்களின் உறவினர்கள் விடுத்த கோரிக்கைகளையும் ஜனாதிபதி மிகவும் கவனமாகக் கேட்டறிந்தார். இதனடிப்படையில் சில அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கியதோடு சில உறுதிமொழிகளையும் ஜனாதிபதி வழங்கினார்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்ட மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளின் ஆழ அகலத்தை நன்குணர்ந்துள்ள ஜனாதிபதி, ‘மாதத்திற்கு ஒரு தடவை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேரில் விஜயம் செய்து இம்மாவட்டத்தில் நிலவும் பிர்சசினைகளைத் தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருக்கும்.

நாட்டின் தலைவரே நேரில் விஜயம் செய்து யாழ்ப்பாண மாவட்ட மக்களின் தீர்க்கப்படாது தொடரும் பிர்சினைகளைக் கட்டம் கட்டமாகத் தீர்க்கப் போவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

ஏனெனில் 30 வருட கால யுத்தத்தில் இருந்து நாடு விடுவிக்கப்பட்ட போதும், யுத்தம் முடிவுற்று எட்டு வருடங்கள் கடந்துள்ள போதும், மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இது ஆரோக்கியமானதல்ல.

இந்நிலைமை நீடிக்குமாயின் அம்மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதும் இலகுவான காரியமல்ல.

அதன் காரணத்தினால் யாழ்ப்பாணம் மாவட்டம் உள்ளிட்ட வட பகுதி மக்களின் தீர்க்கப்படாதுள்ள இப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது மிகவும் அவசியமானது. அதுவே அம்மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு உறுதுணையாக அமையும். அவ்வாறான தீர்வையே மக்களும் எதிர்பார்த்து நிற்கின்றனர்.

ஆகவே ஜனாதிபதியின் இந்த அறிவிப்பும் அவர் முன்னெடுக்கவிருக்கும் நடவடிக்கைளும் வடபகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வை நிச்சயம் பெற்றுக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.