நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொத்து விபரங்களை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட உள்ளது.

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சொத்து விபரங்கள் மற்றும் நிதி நிலைமைகள் பற்றிய விபரங்களை நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் அறிக்கையிட வேண்டும் என்ற நியதியொன்றை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி அவர்களது தந்தை, தாய், மனைவி மற்றும் பிள்ளைகள் ஆகியோரின் சொத்து விபரங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டுமென இந்த புதிய நியதியில் குறிப்பிடப்பட உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களினால் வழங்கப்படும் சொத்து விபர அறிக்கைகளைக் கொண்டு “நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதி பொறுப்புக்கள் குறித்த ஆவணம்” என்ற ஓர் ஆவணத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் பேணிப் பாதுகாக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆவணத்தில் காணப்படும் விபரங்கள் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் அடிப்படையில் வெளிநபர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க விதிகளின் அடிப்படையில் இந்த ஆவணம் பேணப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட உள்ளது.

மனச்சாட்சிக்கு அமைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் விபரங்களை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் காணி ஆதனங்கள், கட்டடங்கள், ஏனைய அசையும் அசையா சொத்துக்கள், பங்குச் சந்தை பங்கு விபரங்கள், பரிசில்கள் உள்ளிட்ட அனைத்து சொத்து பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை வெளியிட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவை குறித்த உத்தேச வரைவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் இது குறித்த அனுமதி பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.