நீதித்துறையின் சுயாதீனத்தை நிலைநாட்டுவதற்கும், அதனை மேலும் வலுப்படுத்துவதற்கும் இலங்கை அரசு பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதிரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் பின்னர் நீதித் துறையின் சுயாதீனம் பல வழிகளில் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் நீதித்துறை சுயாதீனம் தொடர்பில் ஐ.நாவுக்கான சிறப்பு நிபுணர் மோனிகா பின்டோ ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நடைபெற்றுவரும் கூட்டத்தொடரில் அறிக்கையொன்றை முன்வைத்திருந்தார். கடந்த வருடம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட அவர் தனது அறிக்கையில் சில விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பான ஜெனிவாவில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ரவிநாத் ஆரியசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்க இலங்கை அரசு முன்னோக்கிய பல மறுசீரமைப்புகளைத் தற்போது மேற்கொண்டுள்ளது. 19ஆவது திருத்தச் சட்டத்தை மேலும் பலப்படுத்துவது அதில் ஒரு செயற்பாடு.

குறிப்பாக, அதனூடாக மூத்த நீதிபதிகளை நியமித்தல், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அதிகாரிகளை நியமித்தல் மற்றும் நீதி சேவை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமித்தல் உள்ளிட்ட விடயங்கள் சுயாதீனமாகவே இடம்பெறும் எனத் தெரிவித்துள்ளார்.