வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணை அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்காக வடக்கு மாகாண சபை இன்று கூடியுள்ளது.

இதில் வடமாகாண விவசாய பொ.ஐங்கரநேசன் தன்னிலை விளக்கத்தை கூறிய பின் 15 நிமிடங்களுக்கு சபை ஒத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து சபை கூடிபோது, வட மாகாண எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசாவை பேசுவதற்கு அனுமதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் சபை உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரை பேசஅனுமதிக்க முடியாது, அவ்வாறு பேச அனுமதித்தால், ஏனைய உறுப்பினர்களும் பேசுவார்கள் என சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்துள்ளார்.

எனினும் அமைச்சர்கள் தன்னிலை விளக்கம் வழங்கினால் நான் பேசுவேன், எங்களுக்கு பேச வாய்ப்பளிக்காவிட்டால் எதிர்க்கட்சியாகிய நாங்கள் சபையை விட்டு வெளியேறுவோம் என எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த அவைத் தலைவர், “எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தை இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்” எனக் கூறியுள்ளார்.

இதன்போது, “இது ஜனநாயகத்துக்கு முரணான செயல், இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் ஒருதலை பட்டசமாக செயற்படுகின்றீர்கள்” என அவைத் தலைவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திற்கும், வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவுக்கும் இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.