தமிழினிக்கு தலைவணங்குகிறேன் – தென் மாகாண ஆளுநர்

சமூகத்தில் காணப்படும் முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் உண்மைகளை தன் நூலின் மூலம் வெளிக்கொணர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணி பொறுப்பாளர் தமிழினி ஜெயக்குமாரனுக்கு தலைவணங்குகிறேன் என தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

சேர் பொன்.இராமநாதனின் ஜனன தினத்தை முன்னிட்டு, தென் மாகாணத்தின் காலி நகரில் எதிர்வரும் 30 திகதி பல விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (வியாழக்கிழமை) மீள்குடியேற்ற அமைச்சில் நடைபெற்றது. இதன்போது, மாவீரர் தினம் தொடர்பாக ஊடகவியலாளர்களால் வினவப்பட்ட பல்வேறு வினாக்களுக்கு பதிலளிக்கும்போதே தென் மாகாண ஆளுநர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்கள் அணி பொறுப்பாளரான தமிழினி ஜெயக்குமாரன் ஒரு புற்றுநோயாளியாக இருந்துகொண்டு எழுதிய புத்தகத்தை (ஒரு கூர்வாளின் நிழலில்) நீங்கள் அனைவரும் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். குறித்த புத்தகத்தின் மூலம் அவர் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளார். அதற்காக நான் அவருக்கு தலைவணங்குகிறேன். சமூகத்தில் காணப்படும் தவறான கண்ணோட்டத்தையும் முரண்பாடுகளையும் தீர்க்கும் வகையில் குறித்த புத்தகம் அமைந்துள்ளது.

எமது சகோதரத்துவத்தை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும். தங்களுடைய கலாசாரம் மற்றும் அடையாளத்தை பேணிப்பாதுகாப்பது தமிழ் மக்களது உரிமை. அதேபோன்று ஒவ்வொரு மத்தினருக்கும் அவர்களது அடையாளத்தை பாதுகாப்பதற்கு உரிமை உண்டு. ஆனால், இன முரண்பாடுகளையும் உருவாக்கி அவற்றை தாழ்மைப்படுத்திவிடக் கூடாது.

யுத்தத்தில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என சகல இனத்தையும் சேர்ந்த இராணுவத்தினர் உயிரிழந்தனர். மூவின மக்களும் உயிரிழந்தனர். விடுதலைப் புலிகளும் உயிரிழந்தனர். இவர்கள் ஒவ்வொருவரது உயிரும் விலைமதிப்பற்றது. ஆகவே கடந்த 32 வருட காலமாக நடைபெற்ற யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூருவதற்காக இன, மத, மொழிகளை மறந்து ஒரு பொதுவான தினத்தை நாம் ஏற்பாடு செய்வது மிகவும் அவசியம்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்த காலத்தில் மாவீரர் தினம் என அனுஷ்டிக்கப்பட்டது. ஆனால், கடந்த வருடம் அத் தினத்திற்கான ஆதரவு மிகவும் குறைவாகவே காணப்பட்டது. இவ்வருடம் இந்த நிலைமை மேலும் சிறப்பாக அமையும்.

இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சிநிரலின் பின்னணியில் சில சர்வதேச அமைப்புகள் செயற்படுகின்றன. இவ்வாறு முரண்பாடுகளை தோற்றுவித்து அந்நாடுகளின் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் எமது நாடு போன்ற நாடுகளுக்கு விற்பதையே அவை நோக்காகக் கொண்டுள்ளன.

இந்நிலையில், நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து கடந்த காலத்தை மறந்து சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்குவோம்” என்றார்.