மட்டக்களப்பு – மயிலவட்டுவான் ஆற்றுப் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் கூறியுள்ளார்.

வந்தாறுமூலை வீ.சி. வீதியைச் சேர்ந்த 53 வயதுடைய க.குமாரசிங்கம் என்பவரே இவ்வாறு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

காலை 6 மணியளவில் மயிலவட்டுவான் வயல் பிரதேசத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஆற்றுப் பகுதியில் வைத்து யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

அவர் உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் சித்தாண்டி ஈரளக்குளம் குடாவெட்டைப் பகுதியில் வைத்து விவசாயி ஒருவரை காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக மயிலவட்டுவான் மற்றும் சித்தாண்டி சந்தணமடு ஆற்றுப் பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுவதுடன், அடிக்கடி யானையின் தாக்குதல் இடம்பெற்று பலர் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.