எந்தவொரு போராளியும் மரணிப்பதில்லை. ஓர் உன்னத போராளி அஞ்சா நெஞ்சம் படைத்த மாவீரன் சே குவாரா மண்ணில் பிறந்த நாள் இன்று.

தான் கைதியாக பிடிபட்டு நின்ற போது, மரணம் அருகில் நின்ற போதும் கூட சிறிதும் அஞ்சவில்லை. சேவின் காலில் குண்டடிப்பட்டு இரத்தம் பெருக்கெடுத்தபோதும் “ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து கொள்கின்றேன், பிறகு என்னைச் சுடு” என்றார் மகிழ்ச்சியாக.

அப்போதும் சேவின் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட “கோழையே சுடு! நீ சுடுவது சேவை அல்ல, ஒரு சாதாரண மனிதனைத்தான்” மாவீரன் சே இதனைச் சொன்ன போது அச்சமில்லை, மரணத்தை கண்டு சிறிதும் நடுக்கம் இல்லை.

உலகம் இன்றும் கொண்டாடும் போராளி சே இனம், மொழி, மதம், தேசங்கள் கடந்து விடுதலைக்காக போராடிய ஒரு வீரன் அவன் அவதரித்த நாள் இன்று.

சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி அனைத்தையும் தாண்டி ஓர் போராளி, மாவீரன் என்று பல்வேறு முகங்களைக் கொண்டவரே சே குவாரா.

“சே” என்றால் வியப்பு என்று பொருள்படும். நிஜமாகவே ஓர் வியப்பு மிகுந்த மனிதர்தான் சே. சுருட்டும் கையுமாக உலகை வலம் வந்து எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த போராளியே தியாகி சே என்றால் அது மிகையாகாது.

என்னைப் பொறுத்தவரை அவர் மரணத்தை நினைவு கூறுவதை விடவும், ஜனனத்தைக் கொண்டாடுவதே சிறப்பு. காரணம் அந்த மாவீரன் இன்று வரை இறக்கவில்லை வாழ்ந்து கொண்டிருக்கின்றான். போராளிகளின் மனதில் விதைக்கப்பட்டுள்ளான்.

புரட்சிக்கும், போராட்டத்திற்கும் சிவப்பு மிகப்பொறுத்தம் இரத்தத்தின் நிறம் என்பதாலா என்று தெரியவில்லை. ஆனாலும் ஒவ்வொரு தனி மனிதனின் மனத்திலும் ஓர் போராளி, சிவப்பு மனிதன் ஒளிந்துள்ளான்.

சே குவாராவிற்கு உள்ளே மட்டுமல்ல நாடி நரம்புகள் அனைத்திலும் சிவப்பு மனிதன் சிறப்பாகவே இயங்கி வந்தான் அதனாலேயே அவன் மரணத்தை இன்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சே போன்ற தலைவர்களை மெழுகுவர்த்திக்கு ஒப்பிட முடியாது. போராளித் தலைவர்களுக்கு அத்தனை நீண்ட ஆயுள் அமைவதில்லை. மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்த தீக்குச்சி, தீயைத் தூண்டி பிரகாசத்தினை பரவச் செய்துவிட்டு தன்னை மாய்த்துக் கொள்வதற்கு ஒப்பானவர்களே புரட்சித் தலைவர்கள்.

போராட்டக்காரர்களும், புரட்சியாளர்களும் உருவாக்கப்படுகின்றார்களே தவிர தானாக உருவெடுப்பது இல்லை. மரம் தானாக நிற்கும் ஆனால் காற்று அதனை இருக்க விடாது அப்படி உருவாக்கப்பட்ட சேவின் மனதில் மட்டுமல்ல.,

இரத்தத்திலும் உரிமைகளும், விடுதலையும் வெறியாக கலந்து போயின. பாட்டாளிகளின் தோழனாக வாழ்ந்த சே “முட்டி போட்டு உயிர் வாழ்வதனை விட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல் என்று உலகத்திற்கே எடுத்துரைத்தவன்.

சேவின் பிறப்பு தினமான இன்று பல எண்ணங்கள் வந்து போகின்றன. சமூகம் என்னை வாழ விட வில்லை, எனக்கு ஒன்றுமே செய்யவில்லை, அவர்களுக்காக நான் ஏன் உதவ வேண்டும் என நினைப்பவர்கள் தயவு செய்து நிமிர்ந்து நடக்கவேண்டாம்.

போராளியாக நன்னை உருவகப்படுத்திக் கொண்டு, போலி வேடமிட்டு புகழ் தேட நினைப்பவர்களுக்கு மட்டும் இன்று பஞ்சம் இல்லை. தயவு செய்து வருந்துங்கள், திருந்துங்கள் அல்லது சே கூறியது போல செத்து மடிந்து விடுங்கள்.

தொழிலாளிகளைச் சுரண்டி தங்கப் பல் கட்டிக் கொண்டு அது தெரியாமல் சிரிப்பவர்களே! உங்கள் பிடுங்கல், சுரண்டல் வாழ்வை விட்டு விடுங்கள். அதிகார மோகத்தில் நாடகங்களை அரங்கேற்றுகின்றவர்களே அம்பலப்பட்டுப் போகும் ஓர் நாள் எச்சரிக்கையாக இருங்கள்.

ஏழைகளின் வயிற்றிலடித்து பிடுங்கி உண்டு வாழ்பவர்கள், சற்று சிந்தித்து நடவுங்கள். போராளிகளும், புரட்சியாளர்களும் மீண்டும் அவதரித்து விடலாம்.

சே பிறந்து ஒன்றைப் புரியவைத்தான் அதாவது, சமூக சீர்திருத்தம், சமத்துவம், சம உரிமை, தனி மனித உரிமைகள், விடுதலை வாழ்வு இவற்றை காப்பதற்காக எவனுக்கும், எந்த நிலையிலும் தலை குனியத் தேவையும் இல்லை, தலைவன் பதவியும் அவசியம் இல்லை நெஞ்சில் உரமும், உணர்வும் இருந்தால் போதும்.,

ஆனால் போராட்டமும், புரட்சியும் உண்மையாக இருக்க வேண்டும். அதிகாரத்திற்காக, பதவிக்காக போலியாக தன்னைப் புரட்சியாளனாக சித்தரித்து வாழ்ந்து வந்தால், அது அம்பலப்படும் போது நரக வேதனை வந்து சேரும்.

இன்று ஜனனித்த சே குவாரா என்னைப் பொறுத்தவரையிலும் இறக்கவில்லை. வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றான்.

போலித் தலைவர்களின் ஜனனத்தை கொண்டாடும், எண்ணத்தை கொஞ்சம் ஒதுக்கித் தள்ளி விட்டு உண்மையான தலைவர்களின், தியாகிகளின் பிறப்புகளைக் கொண்டாடுவோம். மாவீரர்களும், போராளிகளும் விதைக்கப்பட்டுள்ளார்கள், விருட்சமாக அல்ல விஸ்வரூப அவதரிப்புகளாக.