வெளிவிவகார அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன் வாஸ் குணவர்தன 610 ( 610,904,450) மில்லியன் ரூபா பணம் தனக்கு எப்படி கிடைத்தது என்பதை வெளியிட தவறியுள்ளார்.

ஏழு நிறுவனங்களில் வைத்திருந்த 15 கணக்குகளில் இந்த பணம் இருந்துள்ளதாக பண சலவை சட்டத்தின் கீழ் விசாரணைகளை நடத்திய பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு கண்டறிந்துள்ளது.

நிறுவனங்களில் வைப்பு செய்யப்பட்டிருந்த 211 (211,889,281) ரூபா செலவிடப்பட்டுள்ளது. எனினும் பணம் எப்படி செலவானது என்பதையும் சஜீன் வாஸ் வெளியிட தவறியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பணம் MD Cash முறையில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. அவை MD Withdrawal மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளன என சஜீன் வாஸ் குணவர்தனவின் கணக்காய்வாளர் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க செய்த முறைப்பாட்டுக்கு அமைய நிதி மோசடி விசாரணைப் பிரிவு கடந்த 2016 ஜூன் 27 ஆம் திகதி சஜீன் வாஸ் குணவர்தனவை கைது செய்து, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியது.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரி 9 மாதங்களுக்கு முன்னர், பொலிஸ் விசாரணை அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும் இதுவரை சட்டமா அதிபரின் ஆலோசனை வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.