படகுகள் வழியே தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு சென்ற சுமார் இரண்டாயிரம் அகதிகளை பப்புவா நியூகினியாவில் உள்ள மனுஸ் தீவில் அந்நாட்டு அரசு பல ஆண்டுகளாக தடுத்து வைத்திருக்கின்றது.

இந்த அகதிகள் தடுப்பில் இருந்த போது எதிர்கொண்ட இன்னல்களுக்கு நிவாரணமாக 53 மில்லியன் டொலர்கள் கொடுக்க அவுஸ்திரேலிய அரசு தற்போது முன்வந்துள்ளது.

2013 முதல் கடுமையான அகதிகள் கொள்கையினை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்திரேலிய அரசாங்கம் படகு வழியே அவுஸ்திரேலியாவுக்கு வர முயற்சித்தவர்களை திருப்பி அனுப்பியது.

மேலும், அப்படி முயற்சிப்போருக்கு அவுஸ்திரேலியாவில் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும் அறிவித்தது.

இதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஐ.நாவிலும் எதிர்ப்பு எழுந்த போதும் அம்முடிவினை தொடர்ந்து நியாயப்படுத்தி, நடைமுறைப்படுத்தி வந்தது அவுஸ்திரேலிய அரசு.

அதே வேளை 2013 ஆம் ஆண்டுக்கு முன்வந்த அகதிகள் தொடர்ந்து தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் 1,905 பேர், தாங்கள் மனுஸ் தீவு முகாமில் நவம்பர் 2012 முதல் டிசம்பர் 2014 வரையிலான காலத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது கடுமையான பாதிப்புகளுக்கும் திட்டமிடப்பட்ட துன்பங்களுக்கும் உள்ளானதாக குற்றச்சாட்டினை எழுப்பினர்.

இதையொட்டி அவுஸ்திரேலிய அரசின் மீதும் இம்முகாமினை நிர்வகித்த ஜி4எஸ் மற்றும் பிராட்ஸ்பெக்ட்ரம் என்ற இரு பாதுகாப்பு நிறுவனங்கள் மீதும் வழக்கினை பதிந்தனர்.

இந்த வழக்கு இன்று அவுஸ்திரேலியாவின் விக்டோரியா உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருந்த நிலையில், அவுஸ்திரேலிய அரசும் அந்த இரு பாதுகாப்பு நிறுவனங்களும் 53 மில்லியன் டொலர்களை (இந்திய மதிப்பில் 300 கோடி ரூபாய்க்கும் மேல்) நிவாரணமாக கொடுக்க சம்மதித்துள்ளது.

இதனை உறுதி செய்துள்ள அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் பீட்டர் டட்டன், ‘இந்த வழக்கு விசாரணையை எதிர்கொள்ள செலுத்த வேண்டியிருக்கும் அதிகபட்சமான கட்டணத்தை சேமிப்பதற்காக நன்கு யோசித்து எடுக்கப்பட்ட முடிவு’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இத்தனை பெரும் தொகையினை தடுப்பில் இருந்த அகதிகளுக்கு வழங்க அவுஸ்திரேலிய அரசு உறுதி அளித்திருந்தாலும், மனுஸ் மற்றும் நவுரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எந்த அகதிகளும் அவுஸ்திரேலியாவில் மீள்குடியமர்த்தப்படமாட்டார்கள் என அழுத்தமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுஸ்தீவு முகாம் வரும் ஒக்டோபர் மாதம் மூடப்பட வேண்டும் என பப்புவா நியூகினியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை கண்காணிப்பகத்தின் அவுஸ்திரேலிய இயக்குநர் எலைனி பியர்சன், இந்த நிவாரணத் தொகையினை மிகப்பெரும் வெற்றி என்றும் அவுஸ்திரேலிய அரசு இரு தடுப்பு முகாம்களையும் மூடி அவர்கள் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.