பொது வேட்பாளராக போட்டியிட்ட நாள் முதல் பல்வேறு தாக்குதல்களை தொடுத்து எனக்கு சவால் விடுத்தவர்கள், அவை வெற்றியளிக்காத காரணத்தினால் சூனியம் செய்ய ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டு 38 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு, தொலைக்காட்சி நிலையம் அமைந்துள்ள வளாகத்தில் 5 மாடி கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

எனக்கு எதிராக சூனியம் செய்துள்ளதாக தேசிய பத்திரிகைகளில் வெளியான செய்திகளை பார்த்த போது எனக்கு சிரிப்பு வந்தது.

ஹொரவபொத்தனை பிரதேசத்தில் செய்துள்ளதாக கூறப்படும் சூனியத்தை யார் செய்திருப்பார்கள் என்பதை முழு நாடும் அறியும்.

இப்படியான செயல்கள் மூலம் நான் மேலும் பலமடைவேன். இவற்றை கண்டு ஒரு போதும் கலக்கமடைய போவதிலலை.

அனுராதபுரம் ஹொரவபொத்தனை பிரதேசத்தில் மயானம் ஒன்றில் தனது பெயர் மற்றும் உருவம் வரையப்பட்ட செப்பு தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டமை மற்றும் சூனியம் செய்துள்ளனர் என்ற தகவல்களை கண்டு தான் சோர்ந்து விடப் போவதில்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.