ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள வடமாகாண அமைச்சர்கள் இருவரும் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென கடந்த பத்துத் தினங்களுக்கு முன்னரே கூறியுள்ளதாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராஜா தெரிவித்துள்ளார்.

அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்காக வடமாகாண சபை இன்று (14) கூடிய போது அமைச்சர்கள் தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எடுத்துள்ள முடிவு தொடர்பில் வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் இவ்வாறான கருத்தை வெளியிட்டுப் பத்து தினங்களுக்குப் பின்னரே குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இரு அமைச்சர்களும் தாங்களாகவே பதவி விலக வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சபையில் கூறியிருக்கிறார்.

அந்த வகையில் குறிப்பிட்ட இரு அமைச்சர்களும் பதவி விலக வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் எடுத்துள்ள முடிவு சரியானது எனவும் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் ஏனைய இரு அமைச்சர்கள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படு என வடமாகாண முதலமைச்சர் கூறியிருப்பதை நாங்கள் வரவேற்கின்றோம்.

ஆனால், சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்கள் மீதான விசாரணையை மேற்கொள்வதற்காக அவர்களை ஒரு மாதம் விடுமுறையில் இருக்குமாறு முதலமைச்சர் கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல.

ஏனெனில், அவ்வாறாயின் ஏற்கனவே குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ள இரு அமைச்சர்கள் மீதான விசாரணையின் போது ஏன் அவர்களை விடுமுறையில் இருக்குமாறு முதலமைச்சர் கோரவில்லை என்ற கேள்வியெழுகிறது.

அரசியலமைப்பின் படி அமைச்சர்கள் விடுமுறையில் இருந்தாலும் அவர்களே அமைச்சுக்குப் பொறுப்பானவர்களாவார்கள். ஆகவே, அவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கி விட்டு விசாரணையை நடத்துவதே சரியானது.

மாறாகச் சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்களையும் ஒரு மாதம் விடுமுறையிலிருக்குமாறும் அதுவரை அவர்களின் அமைச்சுப் பொறுப்புக்களை தான் கவனிப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டிருப்பது முரண்பட்ட கருத்தாகவுள்ளது.

அவ்வாறு செயற்படுவதற்கு முதலமைச்சருக்கு அதிகாரமில்லை. சம்பந்தப்பட்ட அமைச்சர்களை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கினால் மாத்திரமே அவர் அந்த அமைச்சுப் பொறுப்புக்களைத் தன்வசம் வைத்தியிருப்பதற்கான அதிகாரமுள்ளது.

ஆகவே, முதலமைச்சரின் இவ்வாறான நடவடிக்கை தொடர்பில் போதுமான தெளிவின்மை காணப்படுவதாகவும் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராஜா தெரிவித்தார்.