தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும் என்ற கூற்று உண்மையாகியுள்ளது. இலங்கை அரசியல் களத்தில் சூடுப்பிடிக்கும் விடயங்கள் எப்போதும் சிறப்பாக இடம்பெறும்.

அதற்கு தற்போது சிறந்த எடுத்து காட்டாக வடக்கு மாகாண சபை விவகாரம் காணப்படுகின்றது. கடந்த சில வாரங்களாகவே அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட விடயம் அமைச்சர்கள் மீதான விசாரணை, அது தொடர்பான அறிக்கை மற்றும் விவாதம் என்பனதான்.

காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, கடத்தப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் என்று எத்தனையோ விடயங்கள் மக்களுக்காக பேசவும், செய்யவும் உண்டு.

அதனை எல்லாம் புறம் தள்ளி விட்டு அமைச்சர்களின் ஊழல் விவகாரம் தொடர்பாக பேச வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. அந்த அளவு அரசியல் தலைமையால் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதுதான் உண்மை.

மக்களினால் தெரிவு செய்யப்பட்ட இவர்களை போன்ற பிரதிநிதிகள் தனது பைகளை நிரப்புவதை நிறுத்தி விட்டு மக்களுக்காகவும் சேவையாற்ற வேண்டும்.

இன்றைய தினம் வட மாகாண அமைச்சர்கள் தொடர்பான விவாதம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராசா ஆகியோர் தாமாகவே பதவி விலகுமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான ஊழல், நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குழுவொன்றை நியமித்திருந்தார்.

அதன்படி அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு விசாரணை செய்யப்பட்ட முறைப்பாடுகளில் ஊழல், நிதி மோசடி, நிர்வாக ரீதியிலான முரண்பாடுகள், நியமனம் சார்பான பதவி விடயங்களும் உள்ளடக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டிருந்தது.

இவ் விசாரணைகள் முடிவுற்றமையை தொடர்ந்து கடந்த மாதம் குறித்த விசாரணை குழுவின் இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. அவ்வாறு கையளிக்கப்பட்ட அறிக்கை தொடர்பான விபரங்கள் 4 அமைச்சர்களுக்கும் முதலமைச்சரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்ட நிதி மோசடி குற்றச்சாட்டுக்களில் அதிகமானவை நிருபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வடமாகாண கல்வி அமைச்சருக்கு எதிரான நிர்வாக ரீதியான குற்றச்சாட்டுக்கள் பலவும் நிருபிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குழு தனது அறிக்கையில், வடக்கு மாகாண அமைச்சர்களான ஐங்கரநேசன் மற்றும் குருகுலராஜா இருவரும் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

அத்துடன் சுகாதார அமைச்சர் மற்றும் மீன்பிடி அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பகுதியளவில் நிரூபிக்கப்படவில்லை எனவும் நிதி மோசடிகள், நியமனங்கள், இடமாற்றங்கள் தொடர்பாக தேவையற்ற தலையீடுகள், வினைத்திறன் அற்ற செயற்பாடுகள் போன்ற குற்றச்சாட்டுக்களே நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் வடமாகாண சபை வினைத் திறனாக இயங்க வேண்டும் எனில் அதிகளவில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட அமைச்சர்கள் இருவர் பதவி விலக வேண்டும் எனவும் அவர்களுக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டது.

எனினும் அது குறித்த விவாதங்கள் இன்றைய தினம் எடுத்து கொள்ளப்பட்ட பின்னர் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள இரு அமைச்சர்களையும் தாமாகவே பதவி விலகுமாறு முதலமைச்சர் கூறினார்.

முதலமைச்சரின் தீர்மானத்தின் பின்னர் வடமாகாண சபையின் சிறப்பு அமர்வு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்போது வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் இருவர் மீதும் விசாரணைகள் நடத்தப்படும்.

அதுவரை விடுமுறையில் செல்ல வேண்டும், இவர்கள் தங்கள் அமைச்சு பொறுப்புக்களில் இருந்து விலகி ஓய்வில் இருக்கவேண்டும், அவர்களின் அமைச்சு பொறுப்புக்களை நான் பார்த்துக் கொள்வேன் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் இருந்து புலப்படுவது என்ன என்றால் அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து மக்களை ஏமாற்றியுள்ளனர்.

மக்கள் வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்படும் அரசியல் பிரதிநிதிகள் அரசியலுக்கு வந்தவுடன் குற்ற செயலில் ஈடுப்படுவது தவறாகும். மக்களினால் தெரிவு செய்யப்பட்ட இவர்களை போன்ற பிரதிநிதிகள் தனது பைகளை நிறப்புவதை நிறுத்தி விட்டு மக்களுக்காகவும் சேவையாற்ற வேண்டும்.

குற்ற செயலில் ஈடுப்பட்ட அமைச்சர்கள் தொடர்பாக தற்போது முதலமைச்சர் எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது. மக்களுக்கு சேவை செய்ய இன்னும் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றது. அதை எல்லாம் விட்டு விட்டு மக்களை ஏமாற்றுவது மன்னிக்க முடியாத குற்றம்.

வடமாகாண சபையில் அமைச்சர்கள், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்பட்டபோது அது தமிழ் மக்களின் மனங்களை பெரிதும் பாதித்திருந்தது. தற்போது குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக முதலமைச்சர் எடுத்திருக்கும் முடிவானது ஏனைய மாகாணசபைகள் உட்பட முழு நாட்டுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சரின் துணிச்சலான செயற்பாடு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சீ.வி ஆட்சிக்காலம் தொடருமானால் பல தவறுகள் தட்டிக் கேட்கப்படுவதுடன், தமிழர்களுக்கான அரசியல் பிரச்சினையிலும் தீர்மான முடிவு கிட்டும் என தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை பிறந்துள்ளது.