கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் ஒன்று திரண்டால், தமிழர் ஒருவரை கிழக்கு மாகாண புதிய முதலமைச்சராக கொண்டுவர முடியும் என, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கொக்கட்டிச்சோலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற லங்கா சதொச நிலையத் திறப்பு விழாவுக்கு, தமிழ் அரசியல்வாதிகள் அழைக்கப்படாமை தொடர்பில் அவர், விடுத்த அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எனவே, எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு சரியான பாடம் புகட்ட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொக்கட்டிச்சோலையில் லங்கா சதொச நிலையத் திறப்பு விழாவை, தமிழ் மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒட்டிக்கொண்டிருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் எவரும், அவ்விழாவுக்கு அழைக்கப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது? கிழக்கு மாகாண சபையில் 11 ஆசனங்களை வைத்திருந்தும், 7 ஆசனங்களைக் கொண்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் கிழக்கு மாகாண சபையை ஒப்படைத்து, கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களுக்கு, கூட்டமைப்பு துரோகம் இழைத்துள்ளது.

மேலும், கடந்த நான்கு வருடங்களில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பலர், காணிகளை இழந்துள்ளனர்.

எனவே, இவ்வாறான விடயங்களை கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.