கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, கடந்த அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த போது, 63.6 மில்லியன் பணத்தை ஏப்பம் விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் இரட்டை குடியுரிமை பெற்றுள்ள தமிழர் ஒருவர் கொழும்பு வெள்ளவத்தை 37 ஒழுங்கையில் ஆடம்பர தொடர் மாடி வீடுகளை நிர்மாணிக்க 2005- 2007 ஆம் ஆண்டுகளில் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் விண்ணப்பப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
இந்த விண்ணப்பத்தை ஆராய்ந்த நகர அபிவிருத்தி அதிகார சபை 7 மாடிகளை கொண்டதாக அந்த தொடர்மாடி வீடுகளை நிர்மாணிக்க அனுமதி வழங்கியுள்ளது.

எனினும் இரட்டை குடியுரிமை கொண்டுள்ள தமிழர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இருந்த நெருக்கம் காரணமாக 7 மாடிகளுக்கு வரையறுக்க வேண்டும் என்ற நிபந்தனையை மீறி 9 மாடிகளை கொண்ட தொடர்மாடி வீடுகளை நிர்மாணித்துள்ளார்.

ஆடம்பர தொடர்மாடி வீடமைப்பில் சம்பந்தப்பட்ட நபர் 60 வீடுகளுக்கு மேல் நிர்மாணித்துள்ளார். ஒரு வீடு 16 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தினேஷ் குணவர்தனவின் அனுசரணையில் நகர அபிவிருத்தி அதிகார சபையும் இந்த சட்டவிரோத கட்டிடத்திற்கு சான்று பத்திரத்தையும் வழங்கியுள்ளது.

2010 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபை கோத்தபாய ராஜபக்சவின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர் இது குறித்து மீண்டும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

வீடுகளை நிர்மாணிக்க விடுதலைப் புலிகள் பணம் வழங்கியிருந்ததாக வெளியான தகவல் வெளியானதன் காரணமாக இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

வெளியான தகவல்கள் அடிப்படையில் இரட்டை குடியுரிமை பெற்ற தமிழரை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்து, தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்தியது.

சட்டவிரோதமாக நிர்மாணித்த இரண்டு மாடிகளுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபை 63.6 மில்லியன் ரூபா அபராதம் விதித்ததாகவும் இதன் பின்னர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் ஊடாக அதனை 20 மில்லியன் ரூபா குறைத்து அபராதத்தை செலுத்தியதாகவும் சம்பந்தப்பட்ட நபர் விசாரணைகளின் போது கூறியுள்ளார்.

இதனையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் வங்கிக் கணக்கை பரீட்சித்து பார்த்த போது அந்த அபராத பணம் சபையின் கணக்கில் இருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் தினேஷ் குணவர்தனவின் இணைப்புச் செயலாளரான பெண்ணொருவரின் (தினேஷ் குணவர்தனவின் நெருங்கிய நண்பி) வங்கிக் கணக்கில் அந்த பணம் வைப்புச் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்க வருமாறு தினேஷ் குணவர்தனவிற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் பல முறை அழைப்பு விடுத்திருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உதவியால் வாக்குமூலம் வழங்க செல்வதை தவிர்த்துள்ளார்.

இதனிடையே இரட்டை குடியுரிமை பெற்ற தமிழர் மேலும் 20 மில்லியன் ரூபாவை நகர அபிவிருத்தி அதிகார சபையில் செலுத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

இதன் பின்னர், சம்பவம் பற்றிய தகவல் வெளியில் கசியாத வகையில் ஆவணங்களை மறைத்து விடுமாறு கோத்தபாய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
இந்த சம்பவத்திற்கு முன்னர் ராஜபக்ச அரசாங்கத்தின் குறைகளை ஒரளவு விமர்சித்து வந்த தினேஷ் குணவர்தன விமர்சனங்களை கைவிட்டு, தன்னை காப்பற்றிய தலைவருக்காக எதனையும் செய்ய முன்வந்துள்ளார்.

இதன் அடிப்படையிலேயே தினேஷ் குணவர்தன தற்போதும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் ராஜபக்சவினருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சகலரது கோப்புகளும் தன்னிடம் இருப்பதாக மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார். தினேஷ் குணவர்தனவின் கோப்பு அந்த கோப்புகளில் ஒன்று என தெரியவருகிறது