நல்லாட்சி அரசை இலங்கையின் உயர் ஆட்சிப் பீடத்தில் அமரச் செய்ததில் தமிழ்மக்களுக்கும் – குறிப்பாக வடபகுதி மக்களுக்கும் – அவர்களின் ஏக பிரதிநிதிகளாகத் தற்போது திகழ்கின்ற கூட்டமைப்புக்கும் – கணிசமான பங்குண்டு என்பதைத் தமிழ் மக்கள் மட்டுமன்றி சிங்கள மக்களும் மறுப்பதற்கில்லை.

இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளாக அரங்கேறிய கொடுங்கோல் ஆட்சிமுறையை – ராஜபக்ஷ அன்கோவை – மாற்றியமைப்பதில் தமிழ்த் தலைமைகள் மட்டுமல்ல சிங்களத் தலைமைகளும் பல்வேறு வியூகங்களை அமைத்தார்கள்; திட்டமிட்டார்கள்; அரங்கேற்றினார்கள். ஆனால், மிகவும் சாணக்கியத்துடனும் புத்திசாதுர்யத்துடனும் காய் நகர்த்தவேண்டிய நிர்ப்பந்தம் சிங்களப் பேரினவாதத் தலைமைகளுக்கு ஏற்பட்டது. ”கரணம் தப்பினால் மரணம்” என்ற நிலையில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரி களத்தில் இறக்கப்பட்டார்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தவர் என்ற பெரும் மாயை பூதத்தைத் தென்னிலங்கைப் பேரினவாதிகள் மத்தியில் ஊதிப் பெருப்பித்து உலாவவிட்டிருந்தது மஹிந்த அரசு. தென்னிலங்கைப் பேரினவாத மக்கள் மஹிந்தவைத் தமது வழிபடு தெய்யோவாகக் கூடக் கருதி நின்றனர். இந்த நிலையில் அந்த அரக்கர் குல ஆட்சியை மாற்றியமைப்பதற்கு தென்னிலங்கை அரசுத் தலைவர்களுக்குத் தமிழ்மக்களின் ஆதரவும் தேவைப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சில சர்வதேச நாடுகளின் ஆலோசனைகளுடன் மஹிந்த அணியிலிருந்தே ஒரு பொது வேட்பாளரை உடைத்தெடுத்து தேர்தல் களத்தில் நிறுத்தினர்.

அந்த நேரத்தில் தமிழ் – சிங்கள மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தது ஆட்சி மாற்றம் ஒன்றைத்தான். அமையப்போகும் புதிய அரசில் இன்ன இன்ன கோரிக்கைகளைத் தமிழ் மக்களுக்கு நிறைவேற்றவேண்டும் என்ற எந்த எழுத்துமூல ஒப்பந்தங்களும் இல்லாமல் – எந்த நிபந்தனைகளும் அற்ற நிலையில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்துக்கு ஆதரவு வழங்கினார்கள். கூட்டமைப்பின் கோரிக்கையைத் தம் வேதவாக்காகக் கருதும் தமிழ் மக்களும் பெருவாரியாக வாக்களித்து – மாகாண சபைத் தேர்தலில் தமது எழுச்சியைக் காட்டியமைபோன்று – ஒரு பேரெழுச்சியைத் தமது வாக்கு என்னும் உயரிய ஆயுதத்தால் வழங்கியமையால் மஹிந்த என்னும் அரக்கன் தோற்கடிக்கப்பட்டான். கொடுங்கோலாட்சி ஒழிக்கப்பட்டது. நல்லாட்சி மலர்ந்தது.

இந்த நல்லாட்சி அரசிடமிருந்து மக்கள் பல கோரிக்கைகளை எதிர்பார்த்தார்கள். இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது காணிகள் விடுவிக்கப்படவேண்டும். சிறையில் காரணமின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும். காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தவேண்டும். சுயநிர்ணயத்துடனும், சுய கௌரவத்துடனும் இந்த நாட்டில் தமிழர்கள் சம அந்தஸ்துடன் வாழக்கூடிய ஓர் ஆகக்குறைந்த சமஷ்டித் தீர்வாவது வழங்கப்படவேண்டும். இதுவரை அப்பாவி மக்களைக் கொன்றொழித்த சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கவேண்டும். ஆகியவையே அவர்கள் நல்லாட்சி அரசிடம் எதிர்பார்த்த கோரிக்கைகள்.

நல்லாட்சி அரசு மலர்ந்து இரண்டுவருடங்களின் ஓரளவுக்கு மக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. ஆயினும், தமது பெரும்பாலான எதிர்பார்ப்புக்களை நல்லாட்சி அரசு இன்னமும் நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகின்றது என்ற வெறுப்பும் தமிழ் மக்கள் மனங்களை நெருடாமல் இல்லை.

இந்த நிலையில் –

அப்பாவி மக்களைக் கொன்றொழித்த சூத்திரதாரிகளைச் சட்டத்தின்முன் நிறுத்தவேண்டும் என்ற இறுதி நிபந்தனையை நேற்றுமுன்தினம் நிறைவேற்றி, நாட்டில் நல்லாட்சி மட்டுமல்ல நீதி, சட்டம், ஒழுங்கும் சிறப்பானமுறையில் செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன என்பதற்குச் சான்றாகக் கூட்டமைப்பினர் மீது நாரந்தனையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் – இரு உயிர் காவுகொள்ளப்பட்டமை – என்பவற்றுக்கான சூத்திரதாரிகளைப் 15 வருடங்களுக்குப் பின்னர் நல்லாட்சியைப் புடம்போட்டுக் காட்டி, அவர்களின் போலிமுகத்திரையைக் கிழித்தெறிந்திருக்கின்றார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்.

அந்தச் சூத்திரதாரிகளுக்கு இரட்டைத் தூக்குத் தண்டனையும் 20 வருடக் கடூழியச் சிறையும் விதித்து இறுதியில் இவ்வாறான காட்டுமிராண்டிச் சம்பவங்கள் இனிமேலும் அரங்கேறக்கூடாது – இவ்வாறான ஒரு மிகக் கொடூரமான தீர்ப்பை இனிமேலும் தன் கையால் எழுதக்கூடாது – என்று தனது பேனாவையும் மேசையில் குத்தி உடைத்தெறிந்திருக்கின்றார். உண்மையில் தமிழ் மக்களைப் பொறுத்தவரை – எத்தனையோ எம் உடன் பிறப்புக்கள் தம் உறவுகளை அரச ஒட்டுப் படையினர் காவுகொண்டமையால் கண்ணீருடன் தம் வாழ்வைக் கழிந்து வந்துள்ளனர். அவர்களுக்கு – ஓரளவு நிம்மதியை வழங்குவதாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

நல்லாட்சி தன் நல் – ஆட்சிக்குரிய பண்பை ஆரம்பித்துள்ளதென எண்ணுகின்றேன். இதேபோன்று தமிழர்களின் அத்தனை அபிலாஷைகளையும் நல்லாட்சி இன்னும் மூன்று வருடங்களில் நிறைவேற்றுமா?