அரசியல் துறையில் தற்போது சர்ச்சைக்குரிய பாத்திரமாக மாறியுள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு எதிராக, பொலிஸ்மா அதிபர் சம்பந்தப்பட்ட சம்பவத்தை கொண்டு விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்றம், அதற்கு வெளியில் நடத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு, தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள் என எவற்றிலும் அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு எதிராக தாக்குதல்களை தொடுக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

“சாகல எமக்கு நெருக்கமானவர். அப்படியான ஒருவர் சட்டம், ஒழுங்கு அமைச்சராக இருப்பது எமக்கு நல்லது. தேவையான தகவல்கள் தேவையான நேரத்தில் எமக்கு கிடைக்கின்றன.

பிரபாத் நாணயக்காரவின் வீட்டில் நான் சாகல ரத்நாயக்கவை சந்தித்தேன். நிதி மோசடி விசாரணைப் பிரிவின் ரவி வித்தியாலங்காரவை மாத்திரமே சாகல ரத்நாயக்கவினால் கட்டுப்படுத்த முடியாதுள்ளது.

வித்தியாலங்காரவுடன் மலிக் சமரவிக்ரம டீல் செய்கிறார். சாகலவை விரட்டும் தேவை மலிக் சமரவிக்ரமவுக்கு உள்ளது.

அதற்கு இடமளிக்கக் கூடாது. நாம் கட்டாயம் சாகலவை பாதுகாக்க வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி கூட்டு எதிர்க்கட்சியினருடன் நடந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பகிரங்க மேடையில் தொலைபேசியில் உரையாடிய போது கூறப்பட்ட “நிலமே” மாத்தறை தெவிநுவர ஸ்ரீ விஷ்ணு ஆலயத்தின் முன்னாள் பஸ்நாயக்க நிலமே டிஷான் விக்ரமரத்ன குணசேகர என்பவராவார்.

டிஷான் விக்ரமரத்ன குணசேகர , மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினர்.

நிலமே தொடர்பான விசாரணை விடயத்தில் தலையிடுமாறு, மகிந்த ராஜபக்சவே அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் கோரியதாக தெரியவந்துள்ளது.

அமைச்சர் சாகல ரத்நாயக்க, பொலிஸ்மா அதிபருக்கு எடுத்திருந்த தொலைபேசி அழைப்பு சம்பந்தமாக கூட்டு எதிர்க்கட்சியினர் தொடர்ந்தும் அமைதியாக இருப்பது இதனை உறுதிப்படுத்தியுள்ளது.