வடகீழ் பருவப் பெயர்ச்சி மழைக் காலத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நெற்பயிர்ச் செய்கைகள் உள்ளிட்ட மேட்டுநிலப் பயிர் செய்கைகள் கடும் வெயிலில் கருகுவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மாரி காலத்தில் மழையை நம்பி வேளாண்மை செய்கையில் ஈடுபட்ட தமக்கு, பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மழைக்காலத்திலும், வெயிலுடன் கூடிய உஸ்னமான காலநிலை தற்போது நிலவி வருகின்றது.

மழையை நம்பி வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள், இந்த வருடமும் தமது நிரந்தரத் தொழிலான வேளாண்மை செய்கையை மேற்கொண்டுள்ளனர்.

மார்கழி மழைக்காலம் என்பதனால் மழையை நம்பி கௌபி, குரக்கன், சோளன், இறுங்கு, பயறு போன்ற மேட்டு நிலப் பயிற் செய்கைகளில் ஈடுபட்டனர்.

எனினும் தற்போது வரை பலத்த மழையோ, சிறியளவிலான மழையோ பெய்யாத நிலையில், தமது நெற்பயிர்ச் செய்கைகள் உள்ளிட்ட மேட்டு நிலப் பயிர் செய்கைகள் அனைத்தும் வெயிலில் கருகுவதாக விவசாயிகள்
கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு – படுவான்கரைப் பகுதியிலே அதிகளவு வேளாண்மை செய்யப்பட்டுள்ள நிலையில், போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்ட நெல் வயல்கள் நீரின்றி முற்றாகக் கருகிப் போயுள்ளன.

போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மண்டூர் கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 20 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை பண்ணப்பட்டுள்ள நிலையில், முற்றாகக் நீரின்றி வாடுவதாக விவசாயியான
தெய்வநாயகம் – சிவபாதம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல்வயல்கள் நீரின்றிக் கருகிவரும் பாதிப்புக்கள் குறித்து, நாளை புதன்கிழமை மாவட்ட ரீதியான மதீப்பிடு ஒன்றைப் பெறவுள்ளதாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் மட்டக்களப்பு
மாவட்ட
ஆளையாளர் எஸ். சிவலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.