முப்பது வருடகால யுத்தம் அன்புக்குரியவர்களை குடும்பங்களில் இருந்து பிரித்துவிட்டதனால், உரிய பாதுகாப்பு இல்லாமல் வாழ்வதற்காகப் போராட வேண்டியிருப்பதாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் ஒன்றியத்தின் தேசிய மாநாட்டில் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

விழுது ஆற்றல் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் இந்துமதி ஹரிஹர தாமோதரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. எங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வழியின்றியும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழியின்றியும், காலத்துடன் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். போதிய இருப்பிட வசதிகளில்லை.

எங்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. உரிய சமூக அடிக்கட்டுமானவசதிகள் இன்றி, போர் முடிந்த பின்னரும் அல்லலுறுகின்றோம் என்று அந்த ஒன்றியம் இந்த மாநாட்டில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எமது பிரச்சினைகளைக் கூறுவதற்கு நாம் காவல்துறையினை நாடும்போதும் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சொல்லில் அடங்காதவை என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

நாம் உழைப்பதற்கு அஞ்சுபவர்களல்ல. ஆனாலும் எமக்குரிய வாழ்வாதார முயற்சிகள் பொருத்தமானவையாக ஏற்படுத்தித் தரப்பட வேண்டும் என பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தெரிவித்துள்ளனர். பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான தேசிய மாநாட்டுக்கான அழைப்பை விழுது ஆற்றல் மையம் போகுஸ் விமன் நிறுவனத்துடன் இணைந்து விடுத்திருந்தது.

நல்லிணக்க வழிமுறையில் பெண் தலைமைத்துவ குடும்பங்களை வலுப்படுத்தி, வழிப்படுத்தல் என்ற தொனிப் பொருளில் இந்தத் தேசிய மாநாடு நடத்தப்பட்டது.

தென்மாகாணத்தின் காலி மாவட்டம், ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டம், வடமாகாணத்தின் யாழ் மாவட்டம், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டம், மத்திய மாகாணத்தின் பதுளை மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களில் இருந்தும், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலதரப்பட்டவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

வடமேல் மாகாணத்தின் சுகாதார அமைச்சின் செயலாளர் விக்கிரமசிங்க, பேராதனை பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் இராமசாமி ரமேஸ், யாழ் மாவட்ட திட்டமிடல் பிரதி பணிப்பாளர், வடமாகாண சமூக சேவை திணைக்கள அதிகாரிகள் உட்பட மாகாண திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.