இலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்தவும் மிக முக்கிய பிரபுக்களை கொலைசெய்யவும் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கொழும்பிலுள்ள பிரபல கசினோ நிலையமொன்றில் பணியாற்றும் Ni Maa Ze Ren என்ற சீன நாட்டு பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறிபார்த்து சுடுவதில் வல்லமை கொண்ட மற்றும் பிரபல கூலிப்படைகளுடன் தொடர்புடைய குறித்த நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இன்று வெளியாகியுள்ள ஆங்கில நாளிதழொன்று குறிப்பிட்டுள்ளது. சந்தேகநபர் கைதுசெய்யப்படும்போது அவரது சுற்றுலா விசா காலாவதியாகியுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. குறித்த நபர் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை உள்ளிட்ட முக்கிய பிரபுக்கள் தங்கும் இடங்களைச் சுற்றிய வளாகத்தில் காணப்படும் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் வசித்து வந்துள்ளார். குறித்த நபரின் மனைவி சீனாவில் அரச புலனாய்வாளராக பணியாற்றுவதாகவும் பிரபல அரசியல்வாதிகளுடன் அவர் தொடர்பில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவ்வாறான பின்புலம் கொண்ட ஒருவர் உண்மையில் என்ன காரணத்திற்கான இலங்கை வந்துள்ளார் என்பதை கண்டறியும் முயற்சியில் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். முக்கிய பிரபுக்களை இலக்குவைத்து குறித்த நபர் வந்திருந்தால் அதன் பின்னணியில் யார் செயற்படுகின்றார்கள் என்பது தொடர்பாக கண்டறிவதற்காக அவரது தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட தகவல்களையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆராய்ந்து வருகின்றனர். சந்தேகநபர் தற்போது மீரிஹான தடுப்பு நிலையத்தில் தடுத்துவைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.