நெருக்கடியால் இரட்டை சத வாய்ப்பை இழந்தேன்- ராகுல்

இந்திய வீரர் லோகேஷ் ராகுல், தனது கடைசி மூன்று இன்னிங்சில் சரியாக ஆடாததால் (0, 10 ரன், 24 ரன்) நெருக்கடிக்குள்ளானார். இந்த சூழலில் சென்னை டெஸ்டில் 199 ரன்கள் விளாசியது அவருக்கு திருப்தி அளித்தாலும், இரட்டை செஞ்சுரி நூலிழையில் கிட்டாமல் போனது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. 3-வது நாள் ஆட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘நான் ஆட்டம் இழந்த அந்த பந்துக்கு முன்பு வரை எல்லாமே எனக்கு சரியாக அமைந்தது. பந்தை சிறப்பான முறையில் எதிர்கொண்டு ரன்கள் சேகரித்தேன். துரதிர்ஷ்டவசமாக இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்ற நெருக்கடியால் ஆட்டம் இழந்து விட்டேன். மோசமான ஒரு ஷாட்டை அடித்து விக்கெட்டை பறிகொடுத்து விட்டேன்.

பொதுவாக பயிற்சியாளர்கள், ஒவ்வொரு ரன்னும் மிகவும் முக்கியமானது என்று தங்களது வீரர்களிடம் சொல்வார்கள். ஒரு ரன் எவ்வளவு முக்கியமானது என்பதை அனைவரும் உணர்ந்து இருப்பார்கள். 199 ரன்கள் எடுப்பது எளிதான காரியம் அல்ல. இரட்டை சதத்தை எடுக்க முடியாமல் போனது வேதனை அளித்தாலும் அணிக்கு 199 ரன்கள் பங்களிப்பை அளித்த மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு செல்வேன். இந்த சதம் எனது வாழ்க்கையில் முதன்மையானதாக இருக்கும்’ என்றார்.

மேலும் அவர் கூறும் போது, ‘இந்த டெஸ்டில் 100 முதல் 150 ரன்கள் முன்னிலை பெற்று விட்டால், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்குள்ளாக்க முடியும்’ என்றார்.