யாழ். நல்லூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் ஹேமரத்னவின் இறுதிக் கிரியைக்கான முழுச் செலவுகளையும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் பொறுப்பேற்கவுள்ளார்.

அத்துடன், உயிரிழந்த ஹேமரத்னவின் குடும்பத்திற்கு, நீதிபதி இளஞ்செழியன் குடும்பத்தினர் நிதியுதவிகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஹேமரத்ன, 15 வருட காலமாக நீதிபதி இளஞ்செழியனுக்கு மெய்ப்பாதுகாவலராக பணியாற்றியது மட்டுமல்லாது, அவரை விட்டுப் பிரிவது இல்லை என்றும் நீதிபதியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கிடைக்கப்பெறும் விடுமுறைகளைக் கூட எடுத்தது இல்லை என்றும் மாதத்தில் வரும் 30 நாட்களும் தொடர்ச்சியாக பணியாற்றியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவருக்கு கிடைத்த கட்டாய விடுமுறைகளைக் கூட எடுத்தது இல்லை என்றும் அவரது சொந்த ஊரான சிலாபத்திற்கு பயணம் மேற்கொள்வது மிகக் குறைவு என்றும் நீதிபதியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நீதிபதி இளஞ்செழியன் மீது அளவு கடந்த அன்பு கொண்ட ஹேமரத்ன, உயிரிழந்தமை தங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் வாகனத்தை இடைமறித்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் ஹேமரத்னவிற்கு உப பொலிஸ் பரிசோதகர் பதவி தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் போது மெய்ப்பாதுகாவலர்களின் சடுதியான செயற்பாட்டாலேயே நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.