முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம்

இரண்டரை மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

குற்ற விசாரணைப் பிரிவினர் இவ்வாறு நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்குத் தொடர்பில் ஜகத் ஜயசூரியவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி லசந்த விக்ரமதுங்க, ரத்மலானை அத்திட்டிய பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஜகத் ஜயசூரிய வன்னி கட்டளைத் தளபதியாக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொலை தொடர்பில் ஏற்கனவே இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 17 படையினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

படைத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் லசந்த கொலை குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டதா என ஜகத் ஜயசூரியவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஜெனரல் ஜகத் ஜயசூரிய தற்போது பிரேஸில் நாட்டுக்கான தூதுவராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.