யாழ். கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலய முன்றலில்

எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல் 05.30 மணியளவில் அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி ஆரின் நினைவு நாள் இறுதி நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதன்போது அவரது நினைவாக ‘தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி’ எனும் பெயரில் புதிய கட்சி உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளதாக அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் தலைவர் பொன்மதிமுகராஜா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல் 01-30 மணி முதல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மதத் தலைவர்களினதும், ஆலயக் குருமார்களினதும் ஆசியுடன் எமது கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் போது கட்சியின் தலைவர், செயலாளர் உட்படக் கட்சியின் சகல அங்கத்தவர்களுக்குமான தெரிவு இடம்பெறவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் எமது மக்களுக்கு நன்மை செய்யும் என எதிர்பார்த்த போதும் தமிழர்கள் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.
2016 ஆம் ஆண்டுக்குள் தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோம் என மார்தட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களும் இன்று மெளனித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான காலகட்டத்தில் எமது மக்களை வழிநடாத்தப் புதிய தலைமையொன்று தேவை. நாம் எமது மக்களுக்கான அரசியல் தீர்வையும், ஏனைய உரிமைகளையும் தார்மீக வழியில் நின்று பெற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளோம்.

தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்ச் செல்வம், சசிகலா உள்ளிட்டோரைச் சந்தித்துத் தமிழர்களது தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளோம் என்றார்.

இதேவேளை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாணக் கிளைத் தலைவரும், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகருமான செல்லையா விஜயரட்ணம் கருத்துத் தெரிவிக்கையில்,

கூட்டமைப்பில் நான்கு அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றனர். சரியான அரசியல் தலைமைகள் தமிழ்மக்களுக்கு இல்லையெனக் கூட்டமைப்பு உறுப்பினர்களே கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

பின்னர் ஏன் இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர்? பாராளுமன்றத்திற்கு என்ன சம்பளம் எடுக்கவா செல்கின்றார்கள்?

தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பூட்டப் போகிறார்கள் என்று சொன்ன காலகட்டத்திலும் நான் முன்னின்று கட்சியை வழிநடத்தினேன்.

நாங்கள் புதிய கட்சியை ஆரம்பிப்பதன் நோக்கம் எமது மக்களுக்கான சரியான சேவை சென்றடையாமையே ஆகும். ஒரு மாகாண சபை உறுப்பினர் தனது தம்பிக்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு மாகாண சபையில் முரண்பட்டுள்ளார்.

மக்களைப் பற்றி இவ்வாறானவர்கள் சிந்திக்கத் தவறுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். எமது கட்சி அனைவரையும் ஒன்று திரட்டி, மத பேதம், ஜாதி பேதம் எதுவுமின்றிச் செயற்படும்.

மக்கள் தான் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தான் மக்கள் எனும் நோக்கில் தான் நாங்கள் செயற்படுவோம்.

நான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தராகக் கடந்த காலங்களில் செயற்பட்டேன். ஆனாலும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் தற்போது சரியான கட்டமைப்புக் காணப்படவில்லை.

கட்சியின் செயலாளர் ஆனந்த சங்கரி மாத்திரம் தான் தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். கட்சிக்குள் தற்போது புகுந்துள்ள நான்கைந்து மூஞ்சீறுகள் கட்சியை அழிக்கின்றன.

தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் மூத்த உறுப்பினர்களுக்கு மரியாதையே கிடையாது. ஒரு சிலர் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கட்சியை வைத்திருக்க முயல்கிறார்கள்.
நாங்கள் இது தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகத்திற்குப் பல தடவைகள் எடுத்துக் கூறிய போதும் அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளிக்கிறார்.

இதனால் தான் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆனந்தசங்கரி ஐயாவின் மகனின் தலைமையில் நானும், அவரும் சுயேட்சையாகப் போட்டியிட்டிருந்தோம்.

நாங்கள் ஐக்கியமாகச் செயற்பட வேண்டும். ஐக்கியம் என்று சொல்லிக் கொண்டு அண்ணன் – தம்பி சண்டை இடம்பெறக் கூடாது. இவ்வாறான நிலைமை ஏற்படக் கூடாது.

மூத்த உறுப்பினர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும். வந்தோரை வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம். யார் வந்தாலும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ள நாங்கள் தயாராகவிருக்கிறோம்.

ஆனால், எமது கட்சியுடன் இணைந்து கொள்ள விரும்புவர்கள் சாத்வீகக் கொள்கையுடையவர்களாகத் தானிருக்க வேண்டும். ஆயுதப் போராட்ட சிந்தனையையே அவர்களிடம் இருக்கக் கூடாது என்றார்.

இதேவேளை, எதிர்வரும் 24, 25, 26 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறவிருந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ஆர் மற்றும் முன்னாள் அனைத்துலக எம்.ஜி. ஆர் பேரவையின்

தலைவர் பொன். மதிமுகராஜாவின் 18 ஆவது ஆண்டு நினைவு நாளும், சுனாமியின் 12 ஆவது ஆண்டு நினைவு நாளும் என முப்பெரும் விழாவாக நடாத்துவதற்குத் தீர்மானித்திருந்த

போதும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பின் காரணமாக எளிமையான முறையில் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.