சொன்னதை செய்தார்: அயன் மேன் ஸ்டைலில் ‘ஜார்விஸ்’ மென்பொருளை உருவாக்கிய மார்க்!

பணிவிடை செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு

தொழில்நுட்பம் மூலம் வேலை செய்யும் ‘ஜார்விஸ்’ எனும் மென்பொருள் உதவியாளரை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் உருவாக்கியுள்ளார்.

அயன் மேன் படத்தில் டோனி ஸ்டார்க் கதாபாத்திரத்திற்கு படம் முழுக்க உதவி புரிவதை போல் இயக்குனரின் கற்பனை கதாபாத்திரமாக ஜார்விஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதே போன்று ஜார்விஸ் கதாபாத்திரத்தை நிஜமாக்கி, செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மென்பொருளை கண்டறிந்து அதற்கு ஜார்விஸ் என பெயர் சூட்டியுள்ளார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க்.

மார்க் ஜூக்கர்பர்க் தன் வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களையும் இண்டர்நெட் உடன் இணைத்து அவற்றை ஜார்விஸ் மென்பொருளின் சர்வர்களில் இணைத்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ஜார்விஸ் மென்பொருளை உருவாக்க பல மாதங்களாக மார்க் ஜூக்கர்பர்க் கோடிங் செய்திருக்கிறார்.

ஜார்விஸ் உதவியாளர் மென்பொருள் ஆனது மார்க் வடிவமைத்த ஆப் மூலம் மற்றவர்கள் பேசுவதை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் புரிந்து கொண்டு, கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது, அன்றைய நிகழ்வுகளை நினைவூட்டுவது போன்றவற்றை மேற்கொள்கிறது. இத்துடன் மார்க் சாப்பிட வேண்டிய நேரத்தை சரியான சமயத்தில் நினைவூட்டும்.

இத்துடன் தன் வீட்டிற்கு யார் வருகிறார்கள் என்பதையும் ஜார்விஸ் அறிந்து கொள்கிறது. நம் வீடுகளில் பணியாட்கள் செய்யும் அனைத்தையும் செய்யும் ஜார்விஸ், குடும்பத்தினருக்கு பிடித்த இசையை இயக்குவது, குழந்தைகளை பார்த்துக் கொள்வது உள்ளிட்ட பணிகளையும் கவனித்து கொள்கிறது.

ஃபேஸ்புக் வீடியோ மூலம் தான் கண்டறிந்த ஜார்விஸ் உதவி மென்பொருளை அறிமுகம் செய்த மார்க், அதனை மேலும் மேம்படுத்த நம்மிடமும் பரிந்துரைகளை கேட்டிருக்கிறார். முழுக்க முழுக்க இண்டர்நெட், செயற்கை நுண்ணறிவு, ஆடியோ சார்ந்த தொழில்நுட்பம் மூலம் ஜார்விஸ் வேலை செய்கிறது. இதே போன்ற அம்சம் அனைவரது வீடுகளுக்கும் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் உறுதி.