இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றியதையடுத்து,

இந்திய அணிக்கு இந்த ஆண்டு சிறப்பானது என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்டிலும் இந்தியா வெற்றி பெற்றது. பரபரப்பான இந்த டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 75 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் இந்தியா 5 டெஸ்ட் கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே 2-வது, 3-வது, 4-வது டெஸ்டில் வென்று இருந்தது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

இந்திய அணி டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் வெல்வது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 2013-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4-0 என்ற கணக்கில் வென்று இருந்தது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக 4-0 என்ற கணக்கில் வென்று இருக்கிறது. இதற்கு முன்பு அசாருதீன் தலைமையிலான அணி 1993-ல் 3-0 என்ற கணக்கில் வென்றதே நல்ல நிலையாக இருந்தது.

சேப்பாக்கம் டெஸ்டில் பெற்ற வெற்றிக்கு பிறகு கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-

2016-ம் ஆண்டை பொறுத்தவரை இந்திய அணிக்கு சிறப்பானது. அனைத்து டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி இருக்கிறோம். ஆசிய கோப்பை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றுள்ளோம்.

இந்த ஆண்டில் இரண்டு பின்னடைவு மட்டுமே இருந்தது. ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் தொடரிலும், 20 ஓவர் உலகக் கோப்பையிலும் தோற்றது தான்.

2016-ம் ஆண்டு இந்திய அணிக்கு மறக்க இயலாத சிறந்த ஆண்டாகும். இதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இது தொடக்கம் தான். இனி வரும் ஆண்டுகளிலும் இதேபோன்று வீரர்கள் முழு திறமையுடன் ஆடுவார்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். இளம் வீரர்கள் கருண் நாயர், லோகேஷ் ராகுல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டனர்.

வேகமாக பாடம் கற்றுக் கொண்டது பாராட்டுதலுக்கு உரியதாகும். குறிப்பாக கருண் நாயர் முச்சதம் அடித்தது அபாரமானது. இந்திய டெஸ்ட் அணியிலும் தொடர்ந்து திறமையான வீரர்கள் இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் ஜடேஜாவின் பந்துவீச்சை குறிப்பிட்டு ஆக வேண்டும். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக அவர் சிறப்பாக பந்து வீசினார். எந்த ஆடுகளத்திலும் நேர்த்தியுடன் பந்துவீசும் திறமையை அவர் பெற்று உள்ளார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சென்னை டெஸ்டில் முச்சதம் அடித்த கருண் நாயர் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 5 டெஸ்டில் 655 ரன்கன் குவித்த விராட் கோலி தொடர் நாயகன் விருதை பெற்றார்.

இந்த ஆண்டில் இந்திய அணி 12 டெஸ்டில் விளையாடி 9-ல் வெற்றி பெற்றது. 3 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.