ஜெர்மனி தலைநகர் பெர்லினில் திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட லாரி தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.)

பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி நிறுவனமான “அமாக்’ தெரிவித்ததாவது: பெர்லினில் கடை வீதிக்குள் பொதுமக்கள் மீது லாரியை ஏற்றிவிட்டுத் தப்பிச் சென்றவர் ஐ.எஸ். படையைச் சேர்ந்தவர்.

இஸ்லாம் மதத்துக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள நாடுகளின் குடிமக்களைக் குறிவைத்துக் கொல்லுமாறு ஐ.எஸ். பிறப்பித்துள்ள உத்தரவை அவர் நிறைவேற்றியுள்ளார் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெர்லினில் உள்ள பாரம்பரிய கிறிஸ்துமஸ் கடைவீதியில் பண்டிகைக்கான அலங்காரப் பொருள்களை வாங்குவதற்காக பொதுமக்கள் திங்கள்கிழமை பெருமளவில் கூடினர்.

இந்நிலையில், அவ்வழியாக வேகமாக வந்த லாரி, கூட்ட நெரிசல் மிகுந்த கிறிஸ்துமஸ் கடைவீதிக்குள் தறிகெட்டு ஓடியது. இதில் அங்கிருந்த நடைபாதையில் சென்றவர்கள் மீது லாரி மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 48 பேர் காயமடைந்தனர்.