அம்பாந்தோட்டை துறைமுகம் சிறிலங்கா கடற்படை தவிர்ந்த வேறெந்த கடற்படையினாலும், இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமை, சீன நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது. இதனால் சீனக் கடற்படை அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பயன்படுத்தக் கூடும் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம,

“அம்பாந்தோட்டை துறைமுகம் வணிகச் செயற்பாடுகளுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படும். இந்த நிபந்தனை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

சிறிலங்கா கடற்படை தவிர்ந்த, வேறெந்த இராணுவப் பிரசன்னத்துக்கும் இங்கு இடமளிக்கப்படாது.

துறைமுகத்தின் பாதுகாப்புக்கு சிறிலங்கா கடற்படை, காவல்துறை, துறைமுக அதிகாரசபை என்பனவே பொறுப்பாக இருக்கும்” என்று தெரிவித்தார்.